பாகிஸ்தானுக்கான ரூ.2,300 கோடி நிதி நிறுத்தம்: அமெரிக்கா முடிவு

பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சுமார் ரூ.2,300 கோடி (350 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை நிறுத்தி வைப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சுமார் ரூ.2,300 கோடி (350 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை நிறுத்தி வைப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான்-அமெரிக்கா கூட்டு நடவடிக்கை நிதிக்காக அமெரிக்கா தரப்பில் ஆண்டுதோறும் நிதி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2016-ஆம் ஆண்டு கூட்டு நடவடிக்கை நிதிக்கு சுமார் ரூ.2,300 கோடி நிதியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரக் குழுவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் அறிக்கை ஒன்றை அளித்திருந்தார். அந்த அறிக்கையில், 2016-ஆம் ஆண்டுக்கான கூட்டு நடவடிக்கை குழு நிதிக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அனுமதிக்கும் வகையில், ஹக்கானி பயங்கரவாதக் குழுவுக்கு (ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய அமைப்பு) எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுத்துள்ளது என்று சான்று அளிக்க இயலாது என்று மேட்டிஸ் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சுமார் ரூ.2,300 கோடியை நிறுத்தி வைப்பதென்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தால் முடிவு எடுக்கப்பட்டது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது மேற்கண்ட தகவலை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகத்தால், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் தொடர்பான அந்நாட்டின் கொள்கை விரைவில் ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த ரூ.2,300 கோடி நிதியை அமெரிக்க அரசு நிறுத்தி வைத்திருப்பது இரு நாடுகள் இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com