பாகிஸ்தானிலும் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினம்: ஒரு ஆச்சர்ய கதை!

உலகமெங்கும் மூன்றாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் அமைதியான முறையில் யோகா தினம் கொண்டாடப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானிலும் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினம்: ஒரு ஆச்சர்ய கதை!

இஸ்லாமாபாத்: உலகமெங்கும் மூன்றாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் அமைதியான முறையில் யோகா தினம் கொண்டாடப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

2014-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது. அதில் இருந்து, மோடியின் முயற்சியால், ஐ.நா சபையின் உதவியுடன்  'சர்வதேச யோகா தினம்' கடந்த 2015-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் இந்த வருடமும் மூன்றாவது சர்வதேச யோகா தினமானது சிறப்பாக கொண்டாடப்பட்டு  வருகிறது.

ஆனால் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் சர்வதேச யோகா தினமானது மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:

பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பிறந்தவர் ஷம்சத் ஹைதர். இவர் இஸ்லாமாபாத்தை தலைமையிடமாக கொண்டு, 'யோகா பாகிஸ்தான்' என்னும் பெயரில் அந்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் யோகா பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறார். இன்றைய சர்வதேச யோகா தினம் குறித்து அவர் கூறியதாவது:

இன்று பாகிஸ்தான் முழுவதும் எங்களுடைய முகாம்களில் வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்டோம். நோன்புக் காலம் என்பதாலும், விரைவில் ரம்ஜான் பண்டிகை நடக்க உள்ளதாலும், தற்பொழுது பெரிய அளவில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதன் பின் கண்டிப்பாக பெரிய நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்படும்.

பாகிஸ்தான் அரசு சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடாதது குறித்தும், இத்தகைய யோகா முகாம்களுக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு குறித்தும் கூறிய அவர், ' எங்களது யோகா முகாம்களுக்கு எல்லா மதத்தினரும் வருகின்றனர். எங்களது பணிகளை பாகிஸ்தான் அரசு தடுத்து நிறுத்தியதில்லை. அவர்களது நிலத்தில் முகாம்களை நடத்த அனுமதி கொடுத்திருப்பதோடு, இதனை ஊக்குவிக்கவும் செய்கிறது.

யோகா செய்வதன் மூலமாக மனச் சமநிலை, அமைதி மற்றும் சமநிலையான வாழ்க்கை ஆகியவற்றினை பெறலாம். முக்கியமாக அது ஒழுக்கத்தினை வலியுறுத்துகிறது. இது இஸ்லாமுக்கு மட்டும் இல்லாமல் எல்லா மதத்தினருக்கும் தேவையானதுதான்

இவ்வாறு ஹைதர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில், கடந்த ஞாயிறு அன்று தூதர் கவுதம் பம்பாவலே மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற யோகா முகாம் ஒன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com