பாகிஸ்தானில் 3 நகரங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 42 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் 3 முக்கிய நகரங்களில் தற்கொலைப் படையினர் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் 3 முக்கிய நகரங்களில் தற்கொலைப் படையினர் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் காவல் துறை ஐ.ஜி. அலுவலகம் அருகே முதல் சம்பவம் நிகழ்ந்தது. தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்து, அவற்றை வெடிக்கச் செய்ததில் 7 போலீஸார் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும், ஜமாத்-உல்-அரார் என்ற பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றுள்ளது.
சில மணி நேரம் கழித்து, குர்ராம் பழங்குடிகள் பிராந்தியத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பரச்சினார் நகரில் அடுத்தடுத்து இரு முறை குண்டு வெடித்தது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு, அங்குள்ள துரி சந்தையில் ஏராளமானோர் கூடியிருந்த வேளையில் அங்கு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்கச் சென்றபோது, இரண்டாவது முறையாக அங்கு குண்டு வெடித்தது. இந்தச் சம்பவங்களில், 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆவர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில், 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கூறினார்.
அதைத் தொடர்ந்து மாலையில், கராச்சி நகரில் ஹெல்மெட் அணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சாலையோர உணவகம் ஒன்றின் வெளியே நின்று கொண்டிருந்த போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com