புதிய ரக ஏவுகணை என்ஜின் சோதனையை மேற்கொண்டது வட கொரியா: அமெரிக்கா தகவல்

வட கொரியா புதிய ரக ஏவுகணை என்ஜின் சோதனையில் ஈடுபட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

வட கொரியா புதிய ரக ஏவுகணை என்ஜின் சோதனையில் ஈடுபட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது:
புதிய ரக ஏவுகணை என்ஜினை வட கொரியா வெள்ளிக்கிழமை சோதனை செய்தது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நிகழ்த்த வல்ல ஏவுகணையில் பொருத்தக் கூடிய என்ஜின் வகையை அந்த நாடு பரிசோதனை செய்தது என்று நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று அதிகாரி தெரிவித்தார்.
இது அமெரிக்க அரசின் அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு அதிகபட்ச அச்சுறுத்தலாக விளங்கும் நாடாக வட கொரியா உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை அவர் வெளியிட்ட அடுத்த நாளே புதிய ரக ஏவுகணை என்ஜின் சோதனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரியா மீது அழுத்தம் தருவது சீனாவின் சர்வதேசப் பொறுப்பாகும் என்றும் ரெக்ஸ் டில்லர்சன் குறிப்பிட்டிருந்தார். தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்ற நிலை நீங்கி, அமைதி நிலவ வேண்டுமானால் வட கொரியாவை கட்டுக்குள் கொண்டு வருவதை சீனா உறுதி செய்ய வேண்டும் என்றார் டில்லர்சன்.
இதனிடையே, வட கொரியாவின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்க கடற்படை மூத்த தளபதி கேரி ராஸ் வாஷிங்டனில் தெரிவித்தார்.
ஏவுகணை என்ஜின் சோதனை பற்றிக் குறிப்பாக கருத்து வெளியிட அவர் மறுத்தார். "உளவுத் தகவல்கள் அடிப்படையிலான செய்தி குறித்த கருத்து எதையும் வெளியிட முடியாது. பதற்றத்தை தூண்டும் நடவடிக்கைகளில் வட கொரியா ஈடுபடக் கூடாது' என்று அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு அணு குண்டு சோதனைகளையும், ஏராளமான ஏவுகணை சோதனைகளையும் வட கொரியா மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது.
வட கொரியா அணு ஆயுதத் திறன் பெறுவதைத் தடுப்பதே தனது தலையாய கடமை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கொரிய தீபகற்பப் பகுதியில், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள், ஜப்பான், தென் கொரிய கடற்படையினருடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com