மெக்கா மசூதி மீதான பயங்கரவாதத் தாக்குதல் சதி முறியடிப்பு

இஸ்லாமியருக்கு மிகப் புனிதமான மெக்கா மசூதியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தும் சதித் திட்டத்தை சவூதி காவல் துறையினர் வெள்ளிக்கிழமை முறியடித்தனர்.
சவூதியில் மெக்கா மசூதி அருகே பயங்கரவாதியின் தற்கொலைத் தாக்குதலில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளைப் பார்வையிடும் அதிகாரிகள்.
சவூதியில் மெக்கா மசூதி அருகே பயங்கரவாதியின் தற்கொலைத் தாக்குதலில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளைப் பார்வையிடும் அதிகாரிகள்.

இஸ்லாமியருக்கு மிகப் புனிதமான மெக்கா மசூதியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தும் சதித் திட்டத்தை சவூதி காவல் துறையினர் வெள்ளிக்கிழமை முறியடித்தனர்.

இது குறித்து சவூதி உள்துறை அமைச்சகத்தின் செய்திஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது:
சவூதியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கிடைத்த உளவுத் தகவலையடுத்து, ஜித்தாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், உளவுத் தகவல் அடிப்படையில் மெக்காவில் இரு இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
மெக்கா மசூதியையொட்டிய அஜ்யாத் அல்}மசாஃபி பகுதியிலும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அந்தப் பகுதியில் அமைந்திருந்த மூன்றடுக்கு குடியிருப்பு ஒன்றை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு பயங்கரவாதி போலீஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். போலீஸார் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சண்டை சிறிது நேரம் நடைபெற்றது. அப்போது திடீரென அந்த பயங்கரவாதி சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலை குண்டு வெடிப்பில், அந்த மூன்றடுக்குக் கட்டடம் தரைமட்டமானது. அந்தக் கட்டடத்துக்கு அருகில் நிறுத்தியிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. துப்பாக்கிச் சண்டையால் சுற்றியிருந்த கட்டடச் சுவர்களும் சேதமடைந்தன.
குண்டு வெடிப்பில் அப்பகுதியில் இருந்த 6 வெளிநாட்டுப் புனிதப் பயணிகள் காயமடைந்தனர். காவல் துறையைச் சேர்ந்த 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
தேடுதல் வேட்டையில், ஒரு பெண் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை மூலம், இந்த உலகின் மிகப் புனிதமான இடமாக விளங்கும் மெக்கா மசூதிக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த தீட்டப்பட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.
இந்தப் புனித நாட்டின் பாதுகாப்புக்கும் ஸ்திரத் தன்மைக்கும் தீங்கு விளைவிக்க வெளிநாட்டில் சதித் திட்டம் தீட்டப்பட்டது. அந்த சதி வேலை முறியடிக்கப்பட்டது என்று சவூதி உள்துறை அமைச்சகத்தின் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சதித் திட்டம் தீட்டிய வெளிநாட்டு சக்தி எது என்பதையோ, எந்த பயங்கரவாதக் குழு இதன் பின்னணியில் செயல்பட்டிருக்கக் கூடும் என்பதையோ சவூதி உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
சவூதி அரேபியாவில் இதற்கு முன்னரும் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. முன்னர் அல்}காய்தா பயங்கரவாத இயக்கத்தினர் ஏராளமான தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். சமீப காலத்தில் இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தின் உள்ளூர் கிளை பல தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த குழு எது என்பது தெரியவில்லை.
"மெக்கா, மதீனா மசூதிகளின் பாதுகாவலர்' என்ற முக்கியப் பதவியை சவூதி அரசர் வகித்து வருகிறார். அதன் அடிப்படையில் இஸ்லாமியரிடையே ஆதிக்கம் செலுத்தும் சவூதி ஆட்சியாளர்களை எதிர்க்கும் வெளிநாட்டு சக்திகள் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்துவதாக கருதப்படுகிறது.
கடந்த 1979}ஆம் ஆண்டு சுமார் 250 பயங்கரவாதிகள் மெக்கா மசூதியைக் கைப்பற்றிப் பல நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சவூதி அரசு குடும்பம் ஆட்சியைத் துறக்க வேண்டும் என்று பயங்கரவாதிகள் கோரினர்.
சவூதி ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து மெக்கா மசூதி பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டது. அந்த நடவடிக்கையில் வீரர்கள், பயங்கரவாதிகள் உள்பட 229 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com