பாகிஸ்தானில் பெட்ரோல் லாரி வெடித்து 151 பேர் பலி; 140 பேர் காயம்

பாகிஸ்தானில் சாலையில் கவிழ்ந்த பெட்ரோல் லாரி வெடித்துத் தீப்பற்றியதில், அதிலிருந்து வழிந்த பெட்ரோலை சேகரித்துக் கொண்டிருந்த 151 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 140 பேர் காயமடைந்தனர்.
பெட்ரோல் லாரி திடீரென வெடித்ததில் தீப்பிடித்து எரியும் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்.
பெட்ரோல் லாரி திடீரென வெடித்ததில் தீப்பிடித்து எரியும் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்.

பாகிஸ்தானில் சாலையில் கவிழ்ந்த பெட்ரோல் லாரி வெடித்துத் தீப்பற்றியதில், அதிலிருந்து வழிந்த பெட்ரோலை சேகரித்துக் கொண்டிருந்த 151 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 140 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணம், லாகூர் நகரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த பெட்ரோல் லாரி, டயர் வெடிப்பு காரணமாக நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.
லாகூருக்கு 400 கி.மீ. தொலைவிலுள்ள பஹாவல்பூர் மாவட்டம், அகமதுபூர் ஷார்கியா பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில், லாரியிருந்த பெட்ரோல் வெளியேறி சாலையில் ஒடியது.
இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பகுதி மக்கள், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் தேங்கியிருந்த பெட்ரோலை சேகரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பெட்ரோல் லாரி திடீரென வெடித்து தீப்பற்றியது. அங்கிருந்த யாரோ ஒருவர் புகைப்பிடிப்பதற்காக தீக்குச்சியைப் பற்ற வைத்ததில், காற்றில் ஆவியாகப் பரவியிருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட நெருப்புக் கோளத்தில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். 140 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
விபத்துக்குள்ளான லாரியிலிருந்து 50,000 லிட்டர் பெட்ரோல் நாசமானது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பஹாவல்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி ராணா சலீம் அஃப்சல் கூறியதாவது:
பாகிஸ்தான் வரலாற்றில் இந்த விபத்து மிக மோசமான கோரச் சம்பவமாகும். விபத்துப் பகுதிக்கு மீட்புக் குழுவினர் செல்வதற்குள் 123 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 140-ஆகவும் அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்டல காவல்துறை அதிகாரி ராஜா ரிஃபாத் கூறுகையில், விபத்து நிகழ்ந்த அகமதுபூர் ஷார்கியா பகுதி மட்டுமன்றி, அருகிலுள்ள மூஸா ரம்ஜான் கிராமத்திலிருந்தும் ஏராளமானோர் பெட்ரோலை சேகரிப்பதற்காக விபத்துப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த விபத்தில் ஏராளமான மோட்டார் சைக்கிள்களும், கார்களும் எரிந்து நாசமாகின என்று தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்களின் உடல்கள் முழுவதும் கருகியுள்ளதால், மரபணு சோதனை மூலம் மட்டுமே அவர்களை அடையாளம் காண முடியும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரங்கல்: இந்த கோர விபத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அதிபர் மம்னூன் ஹுசைன், தெஹ்ஹீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வழிப் பாதையில் தவறான திசையில் வந்த பெட்ரோல் லாரி பயணிகள் வாகனத்தில் மோதி ஏற்பட்ட வெடி விபத்தில் 62 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com