அமெரிக்காவில் தொடரும் இந்தியக் கொலைகள் எதைக் காட்டுகின்றன? பாதுகாப்பின்மையா? ஒற்றுமையின்மையா?

உறவுச் சிக்கல்களினால் நேர்ந்த கொலைகளை அமெரிக்க இனவெறிக் கொலையாக மாற்றும் உத்தியை, கொலையாளிகள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்களோ என்று சந்தேகம் கொள்ள வேண்டியதாகி விடுகிறது.
அமெரிக்காவில் தொடரும் இந்தியக் கொலைகள் எதைக் காட்டுகின்றன? பாதுகாப்பின்மையா? ஒற்றுமையின்மையா?

2017 ஆம் ஆண்டில் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டே வருகிறார்கள். ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதும் உடனடியாக குறீப்பிடத் தக்க அளவில் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் சிலர் செனட் சபை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதை இங்கு நமது இந்திய ஊடகங்களில் பாராட்டிய சுவடுகள் மறைவதற்குள்ளாகவே முதலில் ட்ரம்ப்பின் அமெரிக்க நிறவெறி, இனவெறிக் கொள்கையைக் காரணமாக்கி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய மென்பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா, ஓய்வு பெற்ற அமெரிக்க கடற்படை வீரன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, அடுத்ததாக குஜராத்தைச் சேர்ந்த இந்திய வணிகர் ஹர்னிஷ் படேல், தெற்கு கரோலினாவில் இருந்த தனது வீட்டு உபயோகப் பொருள் விற்பனை அங்காடி வாயிலில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார் என செய்தி வந்தது. ஹர்னீஷை அடுத்து தற்போது, ஆந்திராவைச் சேர்ந்த இந்தியர் சசிகலாவும் அவரது 7 வயது மகனும் கத்தியால் குத்தப் பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி வந்துள்ளது. 

இந்த மூன்று கொலைகளுக்கும் காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் மூன்று பேரும் இந்தியர்கள் எனும் ஒரே காரணத்தால் இந்தியாவில் அதிகம் கவனம் பெறுகின்றனர். இந்தக் கொலைகளில் இந்திய வணிகர் ஹர்னிஷ் படேல் கொலைக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை. சசிகலா மற்றும் அவரது மகன் கொலையில், சசிகலாவின் பெற்றோருக்கு மருமகனும், கொலையான சசிகலாவின் கணவருமான  ஹனுமந்த ராவின் மேல் சந்தேகம் என்பதாக செய்திகள் கசிகின்றன.

மேலும் இந்தக் கொலைகளோடு சேர்த்து கடந்த வாரத்தில் அமெரிக்காவில், இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவரும் கூடத் தன் தாயை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். நளினி டெல்லப்பேராலு என்ற இந்தியப் பெண் கடந்த 2015-ம் ஆண்டு, மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் அர்னவ் உப்பலபதி அப்போது போலீசுக்கு தகவல் கொடுத்தார். தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதும் அதே உப்பலபதிதான். கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவின் கொலைக்கு அமெரிக்க இனவெறி தான் காரணம் என்பதை கொலையாளியின் அப்பட்டமான சாடலே துல்லியமாகக் காட்டி விட்டது. மற்ற இரு கொலைகளுக்கும் நிற வெறி தான் காரணம் என உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில் அதற்கான சாட்சியங்கள் தெளிவாகக் கிட்டவில்லை. ஒருவேளை உறவுச் சிக்கல்களினால் நேர்ந்த கொலைகளை அமெரிக்க இனவெறிக் கொலையாக மாற்றும் உத்தியை, கொலையாளிகள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்களோ என்று சந்தேகம் கொள்ள வேண்டியதாகி விடுகிறது.

ஆகவே அமெரிக்காவில் தொடரும் இந்தியக் கொலைகளுக்கான காரணங்களை ஆராயும் போது நிறவெறி, இனவெறி காரணங்களை மட்டுமே மையமாக வைத்து துப்பு துலக்காமல் இப்படியான உறவுச் சிக்கல் பிரச்சினைகளையும் மனதில் வைத்து தீர ஆராய்வது நல்லது என்பதை நளினி டெல்லப்பரேலு கொலை வழக்கு உணர்த்துகிறது.

மேலும் இது போன்ற கொலைகள் மேலும் தொடராமலிருக்க அந்நியமண்ணில் இந்தியர்கள் தமது ஒற்றுமையை கைவிடாதிருக்க வேண்டும். அதோடு கூட ஒருவருக்கொருவர் அவரவர் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com