ஆப்கனில் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான அமெரிக்க பல்கலை மீண்டும் திறப்பு

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி மூடப்பட்டிருந்த அமெரிக்க பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
ஆப்கனில் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான அமெரிக்க பல்கலை மீண்டும் திறப்பு

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி மூடப்பட்டிருந்த அமெரிக்க பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
தலைநகர் காபூலில் அமைந்துள்ளது அமெரிக்க பல்கலைக்கழகம். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அந்தப் பல்கலைக்கழகத்தில் சுமார் 1,700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு பயின்று வந்தனர். உள்ளூர் ஆசிரியர்களுடன் வெளிநாட்டவரும் அங்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், பயங்கரவாதிகள் அங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நிகழ்த்தினர். அந்தத் தாக்குதலில் 7 மாணவர்கள் உள்பட 16 பேர் பலியாகினர்; 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, சென்ற 7 மாதங்களாக மூடப்பட்ட அந்தப் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
அனைத்துப் பிரிவுகளிலும் வகுப்புகள் செயல்படத் தொடங்கியதாக, பல்கலைக்கழகத்தின் தகவல் பிரிவு இயக்குநர் ஸுபைதா அக்பர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இது ஒரு உயர் கல்வி நிறுவனம். இங்கு பயிலும் அனைவரும் ஒரே விதமாகவே நடத்தப்படுகின்றனர். அறிவைப் புகட்டுவது மட்டுமே இந்தக் கல்வி நிறுவனத்தின் குறிக்கோள். எந்த மதத்துக்கு எதிராகவும் இங்கு போதனைகள் நடைபெறுவதில்லை. தவறான எண்ணத்தில் அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது துரதிருஷ்டவசமானது.
தற்போது கூடுதல் பாதுகாப்புடன் பல்கலை வளாகம் செயல்படும். வாயிற்பகுதியில் குண்டு துளைக்க முடியாத தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவனத்தை வளாக காவலில் ஈடுபடுத்த அதிபர் அஷ்ரஃப் கனி அனுமதி வழங்கியிருக்கிறார் என்றார் அவர்.
கடந்த ஆண்டு ஆக.24-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தின் வாயிற்பகுதியில் வெடிகுண்டு பொருத்திய காரை மோதி தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பின்னர், வகுப்பறைகளை நோக்கி வெளியிலிருந்து இரு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பாதுகாவலர்களும் காவலர்களும் திருப்பித் தாக்கினர். சுமார் 10 மணி நேரம் இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.
வகுப்பறைகளில் ஜன்னல் அருகே இருந்த 7 மாணவர்கள் குண்டடிபட்டு உயிரிழந்தனர். மேலும், ஆசிரியர் ஒருவர், 6 போலீஸார், இரண்டு பாதுகாவலர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதனை தலிபான்கள் நிகழ்த்தியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. அந்தப் பல்கலைக்கழகம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு அதற்கு முன்னரும் இலக்கானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com