"வட கொரியாவின் புதிய ஏவுகணை அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறனுள்ளது'

வட கொரியா ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தி சோதனை செய்த ஏவுகணைதான், அந்நாடு இது வரை உருவாக்கிய ஏவுகணைகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் அது அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன் உள்ளது
வட கொரியா ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய சோதனையின்போது விண்ணில் சீறிப் பாயும் ஏவுகணை.
வட கொரியா ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய சோதனையின்போது விண்ணில் சீறிப் பாயும் ஏவுகணை.

வட கொரியா ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தி சோதனை செய்த ஏவுகணைதான், அந்நாடு இது வரை உருவாக்கிய ஏவுகணைகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் அது அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன் உள்ளது என்றும் அறிவித்தது.
அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"ஹுவாஸோங்-12' என்கிற புதிய ரக ஏவுகணையை வட கொரியா ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி) விண்ணில் செலுத்திப் பரிசோதனை செய்தது. அதிபர் கிம் ஜோங்-உன் ஏவுகணைப் பரிசோதனையை நேரில் பார்வையிட்டார். ஏவுகணை பரிசோதனை மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.
விண்ணில் செலுத்தப்பட்டதும் அது 2,111.5 கி.மீ. உயரத்தை எட்டியது; அடுத்து, 787 கிமீ. தொலைவு பயணம் செய்து ஜப்பான் கடலில் விழுந்தது.
ஏவுகணையின் விசைத் திறன், இலக்கை நோக்கிப் பாதை மாறாமல் பறக்கும் திறன், இலக்கை நோக்கி ஆயுதம் செலுத்தும் திறன், ஆயுதத்தைத் துல்லியமாக வெடிக்கச் செய்யும் திறன், மோசமான சூழலிலும் குறி தப்பாத திறன் உள்ளிட்ட பல வகையான திறன்கள் சோதனையின்போது வெற்றிகரமாகச் செயல்பட்டன.
நாட்டின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தை ஏந்திச் செல்லும் வகையில் திறன் மிக்க ஏவுகணையை உருவாக்கிய விஞ்ஞானிகளை அதிபர் பாராட்டினார்.
அணு ஆயுதம் போன்ற சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இல்லாத சிறிய நாடுகளை மிரட்டி அடி பணிய வைக்கும் அமெரிக்காவின் கேலிக்குரிய அரசியல் -ராணுவக் கொள்கை வட கொரியாவிடம் எடுபடாது என்று வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
சமீபத்திய ஏவுகணை தொடர்பாகத் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், வட கொரியாவின் புதிய ஏவுகணை அதிகபட்சமாக 4,500 கி.மீ. தொலைவு பறக்கும் என்று தெரிகிறது என அமெரிக்க ராணுவத் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வட கொரியா இதுவரை பரிசோதனை செய்த ஏவுகணைகளிலேயே ஞாயிற்றுக்கிழமை செலுத்திய "ஹுவாúஸாங்-12' ஏவுகணைதான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் ஜெஃப்ரி லூயிஸ் கூறினார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உருவாக்குவதில் வட கொரியா முன்னேறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது என்று மற்றொரு நிபுணரான ஜான் ஷில்லிங் கூறினார். மேலும், வட கொரிய நிலப்பகுதியிலிருந்து அந்த ஏவுகணை செலுத்தப்பட்டால், பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான குவாம் தீவைத் தாக்கும் திறன் கொண்டது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு தொடக்கம் முதல் இது வரை இரண்டு அணு ஆயுதங்களை வட கொரியா வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிவித்தது. அதுதவிர ஏராளமான ஏவுகணைகளையும் பரிசோதனை செய்தது. சில ஏவுகணை சோதனைகள் தோல்வியில் முடிந்தன. கடலுக்கு அடியிலிருந்து ஏவுகணை செலுத்தும் நீர்மூழ்கி ஏவுதளங்களையும் அந்நாடு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நீர்மூழ்கி ஏவுதளம் மூலம் பசிபிக் பெருங்கடலிலிருந்து அமெரிக்காவின் மேற்குக் கரையில் உள்ள நகரங்கள் உள்ளிட்ட முக்கிய இலக்குகளைத் தாக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதப் பரிசோதனைகளைத் தொடர்ந்து வட கொரியா மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதையும் மீறி பல ஏவுகணைப் பரிசோதனைகளை அந்நாடு மேற்கொண்டது. வட கொரியாவின் அச்சுறுத்தலையடுத்து, மாபெரும் போர்க் கப்பலை ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்தி போர்ப் பயிற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com