ஈரான் அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

ஈரானில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை அமைதியாகவும் விறுப்விறுப்பாகவும் நடைபெற்றது.
ஈரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்க, தலைநகர் டெஹ்ரானில் உள்ள வாக்குச் சாவடியில் காத்திருக்கும் பெண்கள்.
ஈரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்க, தலைநகர் டெஹ்ரானில் உள்ள வாக்குச் சாவடியில் காத்திருக்கும் பெண்கள்.

ஈரானில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை அமைதியாகவும் விறுப்விறுப்பாகவும் நடைபெற்றது.
உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 9 மணி) வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்குச் சாவடிகள் திறக்கும் முன்பே நீண்ட வரிசையில் மக்கள் வாக்களிக்கக் காத்திருந்தனர். பெண்களுக்குத் தனி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் அவர் வாக்களித்தார்.
தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், இந்த நாட்டின் அரசியல் விதியை மக்களே நிர்ணயிக்கும் முறைதான் இந்தத் தேர்தல்; அதனை அமைதியான முறையில் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்றர்.
தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரெளஹானி (68) மீண்டும் போட்டியிடுகிறார். மிதவாதியாகக் கருதப்படும் அவருக்கு மக்களிடையே கணிசமான ஆதரவு தொடர்கின்றபோதிலும், அணு ஆராய்ச்சி தொடர்பாக வல்லரசுகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் அந்த நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் திருப்தியை அளித்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரசாரத்தின்போது, தீவிர மதவாதிகளைக் கடுமையாக அவர் விமர்சித்து வந்தார். சர்வதேச அரசியலில் உணர்ச்சிகரமான முடிவுகளை எடுக்க முடியாது என்றும், நீண்ட கால அடிப்படையில் சிந்தித்து நாட்டு மக்களின் பொது நன்மையைக் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச அரசியல் உறவுகள் குறித்த தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புள்ள பதவிகளுக்குத் தீவிரக் கொள்கை உள்ளவர்கள் வரக் கூடாது என்று ரெளஹானி தனது பிரசாரத்தின்போது குறிப்பிட்டார்.
மிதவாதியான அவரை எதிர்த்து தீவிரக் கொள்கை உடைய இப்ராஹிம் ரெய்ஸி (56) போட்டியிடுகிறார்.
முன்னாள் அதிபர் மகமூத் அகமதிநிஜாத் ஆட்சியின் கீழ் நடைபெற்ற அணு ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை ஆராய்ச்சித் திட்டங்களையடுத்து, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்தன. இதனால் கச்சா எண்ணெய் விற்பனைத் தடை உள்பட பல்வேறு விவகாரங்களில் ஈரான் கடும் இன்னல்களை எதிர்கொண்டது.
தற்போதைய அதிபர் ஹசன் ரெளஹானியின் ஆட்சியின்போது நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன. ரஷியாவின் மேற்பார்வையில் ஆக்கபூர்வமான அணு ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் வல்லரசு நாடுகளுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதிபர் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிபர் மகமூத் அகமதிநிஜாத் வெற்றி பெற்று அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வார் என்ற முடிவு வெளியாகியது. தேர்தல் முறைகேடுகள் மட்டுமல்லாமல், ஏராளமானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என்பது வரையிலான புகார்கள் எழுந்தபோதிலும், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி, தேர்தலை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.
மகமூத் அகமதிநிஜாத் மீண்டும் அதிபர் பதவியேற்றதும், நடைபெற்ற தொடர் வன்முறையில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் உயிரிழந்தனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com