4 நாடுகள் சுற்றுப் பயணம்: ஜெர்மனி சென்றடைந்தார் மோடி

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அதன் முதல்கட்டமாக ஜெர்மனி தலைநகர் பெர்லினை திங்கள்கிழமை சென்றடைந்தார்.
ஜெர்மனிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெர்லின் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு.
ஜெர்மனிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெர்லின் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு.

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அதன் முதல்கட்டமாக ஜெர்மனி தலைநகர் பெர்லினை திங்கள்கிழமை சென்றடைந்தார்.
இந்தியா - ஜெர்மனி இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான இந்த பயணம், இரு நாட்டு நல்லுறவில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும் என்று ஜெர்மனி சென்றடைவதற்கு முன்னர் முகநூல் வலைதளத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பதிவுகளில் மோடி கூறியுள்ளதாவது:
ஜெர்மனியுடனான நமது நல்லுறவில் எனது பயணம் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு, அறிவியல் புத்தாக்கம், நகர உள்கட்டமைப்பு மேம்பாடு, ரயில்வே, விமானப் போக்குவரத்து, மாசற்ற எரிபொருள், மருத்துவம் போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவோம்.
இந்தியாவின் வளர்ச்சித் திட்டத்துக்கு ஜெர்மனியின் தகுதிகள் அனைத்தும் ஏற்புடையவையாக உள்ளன என்று தனது பதிவுகளில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மன் சென்றடைந்த பிறகு, அந்த நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலைச் சந்தித்துப் பேசும் மோடிக்கு பிரதமர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக ராணுவ அணிவகுப்பு வரேவேற்பு அளிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்திய - ஜெர்மனி அரசு ஆலோசனைக் கூட்டத்தின் 4-ஆவது சுற்றில் பங்கேற்று, ஏஞ்சலா மெர்க்கெலுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை மேற்கொள்வார்.
கடைசியாக இந்த ஆலோசனைக் கூட்டம் தில்லியில் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. உலக விவகாரங்கள், தென் சீனக் கடல், சீனாவில் வர்த்தகச் சாலைத் திட்டம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், ஐரோப்பிய யூனியனுடான தடையற்ற வர்த்த ஒப்பந்தம், இந்தியா-ஜெர்மனி முதலீட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று கருதப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் ஜெர்மனி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்பர். இரு தரப்பிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, ஜெர்மனி அதிபர் ஃபிராங்க்-வால்ட்டர் ஸ்டீன்மியரை மரியாதை நிமித்தம் சந்தித்துவிட்டு, ஜெர்மனியை விட்டு ஸ்பெயினுக்கு பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு புறப்படுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பாவுக்கு மோடி வலியுறுத்தல்: இதனிடையே, "ஹண்டேல்ஸ்பிளாட்' என்ற ஜெர்மன் நாளிதழுக்கு மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஐரோப்பா கண்டமானது பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மனித சமூகத்துக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஐரோப்பா முக்கியப் பங்காற்ற வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்வது அவசரத் தேவையாகும்.
இந்தியாவில் தயாரிப்போம், திறன் இந்தியா, தூய்மை இந்தியா, பொலிவுறு நகரங்கள் உள்ளிட்ட கனவுத் திட்டங்களில் ஜெர்மனியை முக்கியக் கூட்டாளியாக இந்தியா கருதுகிறது என்று மோடி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com