சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவி: இந்தியாவின் பண்டாரி - பிரிட்டனின் கிறிஸ்டோபர் இடையே கடும் போட்டி

சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்தியாவின் தல்வீர் பண்டாரிக்கும், பிரிட்டனின் கிறிஸ்டோபர் கிரீன்வுட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்தியாவின் தல்வீர் பண்டாரிக்கும், பிரிட்டனின் கிறிஸ்டோபர் கிரீன்வுட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தல்வீர் பண்டாரி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்தில் மொத்தம் 15 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒருமுறை 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் புதிதாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
 ஐ.நா. பொதுச் சபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளும் வாக்களித்து இந்த நீதிபதிகளைத் தேர்வு செய்வார்கள். ஐ.நா. பொது சபையில் 97 உறுப்பு நாடுகளின் வாக்குகளையும், பாதுகாப்பு கவுன்சிலில் 8 உறுப்பு நாடுகளின் வாக்குகளையும் ஒரே நேரத்தில் பெறுபவர்கள்தான் சர்வதேச நீதிமன்றத்துக்கு நீதிபதியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
 ஏற்கெனவே நான்கு சுற்றுகளாக நடைபெற்ற தேர்தலில் பிரான்ஸ், சோமாலியா, லெபனான், பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
 இறுதியாக இந்தியாவின் பண்டாரிக்கும், பிரிட்டனின் கிறிஸ்டோபருக்கும் இடையே ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பண்டாரிக்கு ஆதரவாக 115 வாக்குகளும், கிறிஸ்டோபருக்கு ஆதரவாக 76 வாக்குகளும் கிடைத்தன. அதே நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கிறிஸ்டோபருக்கு 9 வாக்குகளும், பண்டாரிக்கு 6 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன. இரு அவையிலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுபவர்தான் வெற்றி பெற முடியும் என்பதால் அடுத்த சுற்று வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
 முன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு பண்டாரி முதல்முறையாக சர்வதேச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷணுக்கு தண்டனையை நிறைவேற்ற கடந்த மே மாதம் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com