காடலோனியாவைவிட்டு வெளியேற வேண்டாம்: சர்வதேச நிறுவனங்களுக்கு ஸ்பெயின் பிரதமர் வேண்டுகோள்

பிரிவினை சர்ச்சைக்கு உள்ளான ஸ்பெயினின் காடலோனியா பகுதியை விட்டு சர்வதேச நிறுவனங்கள் வெளியேற வேண்டாம் என்று பிரதமர் மரியானோ ரஜோய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காடலோனியாவைவிட்டு வெளியேற வேண்டாம்: சர்வதேச நிறுவனங்களுக்கு ஸ்பெயின் பிரதமர் வேண்டுகோள்

பிரிவினை சர்ச்சைக்கு உள்ளான ஸ்பெயினின் காடலோனியா பகுதியை விட்டு சர்வதேச நிறுவனங்கள் வெளியேற வேண்டாம் என்று பிரதமர் மரியானோ ரஜோய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 ஸ்பெயினின் காடலோனியா மாகாணத்தில் ஆட்சி புரிந்து வந்த பிரிவினைவாதக் கட்சி, அப்பகுதியைத் தனி நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை மாகாணப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து மாகாண அரசு கலைக்கப்பட்டு முக்கியத் தலைவர்கள் தேச துரோக குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
 ஸ்பெயினைவிட்டு ரகசியமாக வெளியேறிய காடலோனியா முதல்வர் பெல்ஜியமில் அரசியல் புகலிடம் பெற முயற்சி செய்தார். ஆனால் பெல்ஜியம் அரசு அவருக்கு அரசியல் புகலிடம் அளிக்க மறுத்துவிட்டது. இதனிடையே, காடலோனியா பகுதியில் நிலவும் அரசியல் குழப்ப நிலையால், அங்கு தலைமையிடம் அமைத்துச் செயல்பட்டு வரும் சுமார் 2,400 நிறுவனங்கள் மாகாணத்தை விட்டு வெளியேற முடிவு செய்தன. இவற்றில் பல சர்வதேச நிறுவனங்களாகும்.
 இந்த நிலையில், மாகாணத் தலைநகர் பார்சிலோனாவுக்கு பிரதமர் மரியானோ ரஜோய் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் கூறியது:
 காடலோனியா என்பது ஸ்பெயினின் ஒருங்கிணைந்த பகுதி. சமீபத்திய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு துறைகளில் காடலோனியா பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. அதற்கு இங்குள்ள மக்களும் நிறுவனங்களும்தான் காரணம். தற்போதைய அரசியல் சூழலால் பல நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களை ஸ்பெயினின் பிற நகரங்களுக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளன. ஆனால் தற்போதைய சூழலை மட்டும் கருத்தில் கொண்டு நிறுவனங்கள் காடலோனியாவைவிட்டு வெளியேறக் கூடாது. இங்கு இன்னும் சட்டத்தின் மாட்சிமை உள்ளது. ஸ்பெயின் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரிவினைவாதிகளை மக்கள் நிராகரிப்பார்கள். தேசிய கண்ணோட்டமுள்ளவர்கள் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள். எனவே நாட்டின் வளத்துக்கும் ஐரோப்பிய யூனியனின் வளர்ச்சிக்கும் பங்களிப்பைச் செய்யும் நிறுவனங்கள் காடலோனியாவைவிட்டு வெளியேறாமல், தொடர்ந்து இங்கேயே செயல்பட வேண்டும் என்றார் அவர்.
 கலைக்கப்பட்ட காடலோனியா மாகாணப் பேரவைக்கான தேர்தல் டிச. 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரிவினைவாதத் தலைவர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com