விரைவில் நாடு திரும்புவேன்: லெபனான் முன்னாள் பிரதமர் ஹரீரி

லெபனானின் முன்னாள் பிரதமர் ஹரீரி சவூதியிலிருந்து விரைவில் நாடு திரும்பவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடு திரும்புவேன்: லெபனான் முன்னாள் பிரதமர் ஹரீரி

லெபனானின் முன்னாள் பிரதமர் ஹரீரி சவூதியிலிருந்து விரைவில் நாடு திரும்பவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 சவூதி அரேபிய தலைநகர் ரியாதிலிருந்து அவரது கட்சி தொலைக்காட்சியான ஃபியூச்சர் டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். லெபனான் அரசியலில் இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 லெபனான் பிரதமராக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் சா-அத் ஹரீரி பதவி வகித்து வருகிறார். சவூதி சென்றிருந்த அவர், கடந்த நவ. 4-ஆம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக சவூதி தொலைக்காட்சியில் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
 மேலும், லெபனானில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்தார். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கம் மூலமாகத் தனது நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்த ஈரான் முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 இந்த அறிவிப்பு லெபனான் மட்டுமல்லாமல், அரபு பிராந்தியத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 ஹரீரியின் குற்றச்சாட்டுகளை ஹிஸ்புல்லா மறுத்துள்ளது. மாறாக, சவூதியில் ஹரீரி கைதியாக உள்ளார் என்று ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கூறியிருந்தார். ஹரீரி லெபனான் திரும்பக் கூடாது என்ற நோக்கத்தில் அவர் தங்கியிருக்கும் இடத்திலேயே காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்திருந்தார்.
 இந்த நிலையில், தான் சுதந்திரமாக இருப்பதாகத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஹரீரி தெரிவித்திருக்கிறார்.
 அவர் தெரிவித்திருப்பது: நான் கைது செய்யப்படவோ வீட்டுக் காவலில் வைக்கப்படவோ இல்லை. சுதந்திரமாக இருக்கிறேன். நான் பிறந்தது சவூதியில்; எனக்கு சவூதி - லெபனான் இரட்டைக் குடியுரிமை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நான் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும். நாளைக்கே நான் லெபனான் திரும்ப வேண்டுமானாலும் அதற்கு எந்தத் தடையும் இல்லை. அடுத்த ஓரிரு நாட்களில் நான் நாடு திரும்புவேன். எனது ராஜிநாமா தொடர்பான சட்டபூர்வமான தொடர் நடவடிக்கைகளை நான் லெபனான் திரும்பியதும் மேற்கொள்வேன் என்றார்.
 இதனிடையே, அவருடைய ராஜிநாமா கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை என்று லெபனான் அதிபர் மிஷெல் அவுன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 "வெளிநாடு சென்ற பிரதமர் திடீர் ராஜிநாமா அறிவிப்பை வெளியிட்டது விசித்திரமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய ராஜிநாமாவை நான் இன்னமும் ஏற்கவில்லை. அவர் விரைவில் நாடு திரும்ப வேண்டும். அவருடன் நேரில் பேசிய பிறகுதான் நான் எந்த முடிவையும் எடுப்பேன்' என்று அதிபர் மிஷெல் அவுன் கூறியிருந்தார்.
 அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கையில், "ஹரீரி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; அவருடன் யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது; அவரும் வெளியாட்களுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை; குடும்பத்தினர் கூட அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை' என்று தெரிவித்தன.
 இந்த நிலையில்தான், லெபனான் முன்னாள் பிரதமர் ஹரீரி விரைவிலேயே நாடு திரும்பப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
 சன்னி பிரிவைச் சேர்ந்த சவூதி - ஷியா பிரிவைச் சேர்ந்த ஈரான் இடையேயான மோதலில் லெபனான் சிக்கியுள்ளதுதான் தற்போதைய விவகாரத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
 சன்னி நாடான சவூதி அரேபியாவானது லெபனானின் நட்பு நாடாக இருந்து வருகிறது. லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கம் ஷியா பிரிவினரைக் கொண்டது. இந்த இயக்கத்துக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது. ஹிஸ்புல்லா இயக்கத்தை பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்திருந்தாலும், அதன் அரசியல் பிரிவு லெபனான் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளது. சில காலம் அரசில் பங்கு வகித்தது.
 ஹிஸ்புல்லாவை பிரதமர் ஹரீரி அரசு போதிய அளவு எதிர்க்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை என்று சவூதி கருதியதால் அவர் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய சவூதி அரேபியாவால் கட்டாயப்படுத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை சவூதியும் ஹரீரியும் மறுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com