அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 58 பேர் பலி இசை நிகழ்ச்சியில் துயர சம்பவம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை காண வந்திருந்த பார்வையாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் பலியாகினர்.
அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 58 பேர் பலி இசை நிகழ்ச்சியில் துயர சம்பவம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை காண வந்திருந்த பார்வையாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் பலியாகினர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. எனினும், இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இதுகுறித்த விவரம் வருமாறு: லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மாண்டலே பே எனும் கேளிக்கை விடுதியின் அருகே திறந்த வெளியில் பிரமாண்ட இசைக் கச்சேரி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். மேடையில் பாடகர் ஜேசன் ஆல்டியன் பாடலை பாடிக் கொண்டிருந்தபோது, மாண்டலே பே விடுதியின் மேல்தளத்தில் இருந்த நபர் ஒருவர், கீழே திறந்தவெளியில் இசைக் கச்சேரியை காண வந்திருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
கண்மூடித் திறக்கும் நேரத்துக்குள், துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து தரையில் சாய்ந்தனர். இருப்பினும், அந்த நபர் தனது துப்பாக்கிச் சூட்டை நிறுத்தவில்லை. துப்பாக்கியில் தோட்டாக்கள் காலியானபோதும், அதை நிரப்பிக் கொண்டு வந்தும், வேறு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்தும் சரமாரியாகச் சுட்டார். 
இதுகுறித்த தகவலின்பேரில், ஸ்வாட் அதிரடிப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அப்பகுதியை சுற்றி வளைத்தனர். பிறகு துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இருந்த மாண்டலே பே விடுதிக்குள், ஸ்வாட் அதிரடிப்படை வீரர்கள் நுழைந்தனர். ஒவ்வொரு தளமாக தேடுதல் வேட்டை நடத்திய வீரர்கள், 32-ஆவது தளத்துக்கு வந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் உயிரிழந்து கிடந்தார். அதிரடிப்படை வீரர்கள் சுட்டதில் அவர் இறந்தாரா? அல்லது தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து லாஸ் வேகாஸ் பெருநகர காவல்துறை ஷெரீஃப் ஜோசப் லோம்பர்டோ கூறுகையில், 'துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்; 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுவொரு துயரச் சம்பவம் ஆகும். இதுபோன்ற சம்பவத்தை நாங்கள் எங்களது பணி அனுபவத்தில் இதற்கு முன்பு கண்டதில்லை. அந்த நபர் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்' என்றார்.


பின்னர் அமெரிக்க போலீஸார் நடத்திய விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், லாஸ் வேகாஸை சேர்ந்த ஸ்டீபன் பேட்டாக் (64) என்பது தெரிந்தது. அவர் தங்கியிருந்த அறையில் 10 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளுடன் அவருக்குத் தொடர்புள்ளதா? அந்த அமைப்புகளின் தூண்டுதலால் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களுடன் அமெரிக்க காவல்துறையும், எஃப்.பி.ஐ. அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாஸ் வேகாஸ் காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் மேரிலோ டேன்லி.
லாஸ் வேகாஸ் காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் மேரிலோ டேன்லி.


துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்டீபனுடன் ஒரே அறையில் தங்கியிருந்த மேரிலோ டேன்லி என்ற பெண் தலைமறைவாகி விட்டார். இதேபோல், ஸ்டீபன் பயன்படுத்தி வந்த 2 கார்களையும் காணவில்லை. எனவே டேன்லியையும், காணாமல் போன்ற 2 கார்களையும் தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.


துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், இசைக் கச்சேரியால் களைகட்டியிருந்த பகுதி, ஒரே நிமிடத்தில் ரணகளமானது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தோரின் சடலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததையும், துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தோரையும் காண முடிந்தது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றபோது, அதை சுற்றியுள்ள இடங்களிலும் துப்பாக்கிச் சூடும், குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், பிறகு அது புரளி என்பது தெரிய வந்தது.
டிரம்ப் இரங்கல்
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். 
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், 'காயமடைந்தோருக்கும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக' எனத் தெரிவித்துள்ளார்.
விமானங்கள் திருப்பி விடப்பட்டன
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, அந்நகருக்கு வந்த பல்வேறு விமானங்கள் உடனடியாக அருகில் பிற நகரங்களில் இருக்கும் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், அமெரிக்கா முழுவதும் அந்நாட்டு அரசு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
ஐ.எஸ். பொறுப்பேற்பு
இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக சிரியா, இராக் நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. எனினும், அந்த அமைப்புக்கு இதில் தொடர்பிருப்பதை அமெரிக்க காவல்துறை உறுதிப்படுத்தவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com