'பாகிஸ்தான் அரசின் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா கவலை'

பாகிஸ்தான் அரசின் எதிர்காலம் குறித்தும் ஸ்திரத்தன்மை குறித்தும் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்தார்.
'பாகிஸ்தான் அரசின் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா கவலை'

பாகிஸ்தான் அரசின் எதிர்காலம் குறித்தும் ஸ்திரத்தன்மை குறித்தும் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்தார்.
அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காஜா ஆசிஃபை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: 
பாகிஸ்தான் அமெரிக்காவின் முக்கியக் கூட்டு நாடு. இரு நாடுகள் இடையேயான உறவு விசேஷமானது என்பதுடன் அந்தப் பிராந்தியத்தைப் பொருத்த வரையில், முக்கியமானது. அமெரிக்காவின் தெற்காசிய கொள்கை என்பது ஆப்கானிஸ்தானை மட்டும் நடுநிலைப்படுத்துவது அல்ல. பாகிஸ்தானும் அதில் முக்கியப் பங்காற்றும். அந்த நாட்டு அரசு நிலைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் அரசின் எதிர் காலம் குறித்தும் அதன் ஸ்திரத்தன்மை குறித்தும் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. பாகிஸ்தானில் நீடித்த அமைதி நிலவ வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். தற்போது அந்த நாட்டில் நிலவும் சில அரசியல் சிக்கல்கள் அமெரிக்கா தொடர்புடையவை என்பதை உணர்ந்திருக்கிறோம் என்று ரெக்ஸ் டில்லர்சன் கூறினார்.
ஆனால் அந்தச் சிக்கல்கள் என்ன என்பது குறித்து ரெக்ஸ் டில்லர்சன் விளக்கம் அளிக்கவில்லை.
பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்கா தொடர்ந்து குறை கூறி வருகிறது. தலிபான் போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்குப் புகலிடம் அளிப்பதாகவும், ஹபீஸ் சயீது போன்ற சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு அந்த நாடு பாதுகாப்பு அளிப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதி ஜோசப் டன்ஃபோர்டு கூறியுள்ளார்.
நேட்டோ அமைப்பில் உறுப்பினரல்லாத போதிலும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக பாகிஸ்தான் கருதப்பட்டு வருகிறது. அந்த அந்தஸ்தை மறு பரிசீலனை செய்வோம் என்றும், அந்த நாடு திருந்தாவிட்டால் எந்தவிதமான நடவடிக்கைக்கும் அதிபர் டிரம்ப் தயாராக உள்ளார் என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் கடந்த புதன்கிழமை மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க உறவை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக அந்த நாட்டுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காஜா ஆசிஃப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய அழைப்பை ஏற்று ரெக்ஸ் டில்லர்சன் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வார்கள். அதன் பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர்கள் பாகிஸ்தான் செல்ல உள்ளனர். அதிகாரிகள் நிலையிலும், துணை அமைச்சர்கள் நிலையிலும் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர்தான் ரெக்ஸ் டில்லர்சன் பாகிஸ்தான் செல்வார் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com