இலக்கியம்: ரிட்டனைச் சேர்ந்த ஜப்பானியருக்கு நோபல் பரிசு

ஜப்பானில் பிறந்து, பிரிட்டனில் குடியேறிய ஆங்கில எழுத்தாளர் கஸுவோ இஷிகுரோ, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இலக்கியம்: ரிட்டனைச் சேர்ந்த ஜப்பானியருக்கு நோபல் பரிசு

ஜப்பானில் பிறந்து, பிரிட்டனில் குடியேறிய ஆங்கில எழுத்தாளர் கஸுவோ இஷிகுரோ, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நோபல் தேர்வுக் குழு வியாழக்கிழமை கூறியதாவது:
தனது எழுத்துகள் மூலம், மனித மனங்களின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் கற்பனை உணர்வுகளுக்கு உலகத்துடன் உள்ள தொடர்பை வெளிக்கொண்டு வரும் எழுத்தாளர் கஸுவோ இஷிகுரோ, 2017-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறுகிறார்.
அவரது நாவல்களின் கருப்பொருள்கள் அனைத்தும், சமுதாயத்தில் அனைவரிடமும் காணப்படும் நினைவுகள், நேரம், மற்றும் கற்பனை எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. அவர் எழுதிய பிரசித்தி பெற்ற 'தி ரிமெய்ன்ஸ் ஆஃப் த டே' நாவலில் இவற்றை மிக நன்றாக உணர முடியும்.
அவரது படைப்புகளில் எந்த வகையான நிகழ்வுகளைப் பற்றிக் கூறினாலும், அந்த நிகழ்வுகள் குறித்து மிகவும் எச்சரிக்கையான தொனியில், மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கியங்களைப் பயன்படுத்தியே அவர் விவரிப்பார் என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறக்கூடியவர்கள் என பல்வேறு எழுத்தாளர்களின் பெயர்கள் ஊகிக்கப்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கஸுவோ இஷிகுரோவின் பெயரை நோபல் தேர்வுக் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுக்கான இந்தப் பரிசை, அமெரிக்க ராக் இசைப் பாடகர் பாப் டிலருக்கு வழங்கி நோபல் தேர்வுக் குழு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில், வரும் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், இஷிகுரோவுக்கு நோபல் விருதும், 11 லட்சம் டாலர் (சுமார் ரூ.7.1 கோடி) பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
கஸுவோ இஷிகுரோ (62): ஜப்பானின் நாகசாகி நகரில் கடந்த 1954-ஆம் ஆண்டு பிறந்த இஷிகுரோ, 5 வயதிலேயே பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வளர்க்கப்பட்டார். இவரது முதல் ஆங்கில நாவலான 'எ பேல் வியூ ஆஃப் ஹில்ஸ்' 1982-ஆம் ஆண்டு வெளியானது, அதனைத் தொடர்ந்து 'அன் ஆர்ட்டிஸ்ட் ஆஃப் ஃபுளோட்டிங் வேர்ல்டு' என்ற நாவலையும் அவர் 1986-ஆம் ஆண்டு வெளியிட்டார்.
1986-ஆம் ஆண்டு அவர் எழுதிய 'தி ரிமெய்ன்ஸ் ஆஃப் த டே' நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. நாவல்கள் தவிர, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இஷிகுரோ திரைக்கதை எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com