பிலிப்பின்ஸ் தலைமை நீதிபதியைத் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை

பிலிப்பின்ஸ் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மரியா லூர்து செரீனோவை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
பிலிப்பின்ஸ் தலைமை நீதிபதியைத் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை

பிலிப்பின்ஸ் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மரியா லூர்து செரீனோவை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
நீதித் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் உள்ள 27 உறுப்பினர்களில் 25 பேர் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இரு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதையடுத்து, தலைமை நீதிபதி மரியா லூர்து செரீனோவுக்கு எதிராக வழக்குரைஞர் தாக்கல் செய்த புகார் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற நிலை எழுந்திருக்கிறது.
அந்தப் புகாரில் தலைமை நீதிபதிக்கு எதிராக 27 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஊழல், அரசியல் சாசனத்தை மீறி செயல்படுதல் உள்ளிட்ட அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் தலைமை நீதிபதிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தலைமை நீதிபதி தவிர, ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரான கொஞ்சிடா மொராலிஸ் மீதும் ஊழல் புகார் எழுப்பப்பட்டிருக்கிறது. அவரையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவர் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நாடாளுமன்ற நிலைக் குழுவின் இந்த முடிவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. தலைமை நீதிபதி மீதான புகார்களை முழுமையாக ஆராயாமல் நாடாளுமன்றக் குழு தனது ஒப்புதலை வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
முன்னதாக, தலைமை நீதிபதி மரியா லூர்து செரீனோவை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கருத்து தெரிவித்திருந்தார். 
மேலும், ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தலைமை நீதிபதி வழக்குரைஞராக செயல்பட்டு வந்தபோது ஒரு குறிப்பிட்ட வழக்கில் வாதாடுவதற்காகப் பெற்ற ஊதியம் குறித்த முழு விவரத்தை மரியா லூர்து செரீனோ வெளியிடவில்லை என்று அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். விலை உயர்ந்த கார்களை அவர் பயன்படுத்தி வருவதாகவும், வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது புகழ் பெற்ற நட்சத்திர ஹோட்டல்களில் அதிக கட்டணம் செலுத்தி சொகுசு அறைகளில் தங்கியதாகவும் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி அவர் மீது தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற அவைக்குழு முன்பாக அதிபர் புகார் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரான கொஞ்சிடா மொராலிஸை பொருத்த வரையில், தனது பதவிக்கு ஒவ்வாத வகையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார் என்று அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.
போலி ஆவணங்களின் அடிப்படையில், அதிபர் டுடேர்தேவுக்கு எதிராக அளிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு புகாரை விசாரிக்க கொஞ்சிடா மொராலிஸ் உத்தரவிட்டதால் அவர் மீது அதிபர் கடும் அதிருப்தி அடைந்தார்.
தலைமை நீதிபதியும் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரும் தனது வங்கிக் கணக்குகளையும் சொத்து விவரங்களையும் எப்போது வேண்டுமானாலும் பரிசோதித்துப் பார்க்கலாம் என்று அதிபர் சவால் விடுத்துள்ளார்.
இந்நிலையில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவ்விருவரும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com