மும்பை 2008 தாக்குதலில் கற்ற பாடத்தால் லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டை சமாளித்தோம்: காவல்துறை

மும்பை 2008 பயங்கரவாதத் தாக்குதலின்போது கற்ற பாடத்தால், லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்காமல் காப்பாற்றப்பட்டதாக அமெரிக்க காவல்துறையின் முக்கிய அதிகாரி கூறியுள்ளார்.
மும்பை 2008 தாக்குதலில் கற்ற பாடத்தால் லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டை சமாளித்தோம்: காவல்துறை


நியூ யார்க்: மும்பை 2008 பயங்கரவாதத் தாக்குதலின்போது கற்ற பாடத்தால், லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்காமல் காப்பாற்றப்பட்டதாக அமெரிக்க காவல்துறையின் முக்கிய அதிகாரி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பெருநகர காவல்துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஜோசப் லோம்பார்டோ, 2008ம் ஆண்டு மும்பையில், பயங்கரவாதிகள் நுழைந்து பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, சம்பவப் பகுதிகளை நேரடியாகப் பார்த்தவர்.

அதில் கிடைத்த பாடமே, லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவியது என்கிறார் அவர்.

இது குறித்து அவர் கூறியதாவது, கணக்கராக இருந்து ஓய்வு பெற்றவரும், மிகப்பெரிய பணக்காரருமான ஸ்டீபன் பட்டோக் (64) அக்டோபர் 1ம் தேதி லாஸ்வேகாஸில் உள்ள மாண்டலே பே ஹோட்டலில் இருந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது மிக சக்தி வாய்ந்த இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு நடத்திய தாக்குதலில் 58 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு லாஸ் வேகாஸ் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறிய குழு மட்டுமே வந்தது. துப்பாக்கிச் சூடு நடக்கும் இடத்துக்கு வந்ததும், முதலில் துப்பாக்கிச் சூடு எங்கு நடக்கிறது என்பதை கண்டறிந்தோம். ஹோட்டலின் 32வது மாடியில் உள்ள அறையில் இருந்து துப்பாக்கிச் சூடு வருவதை கண்டுபிடித்து உடனடியாக அங்கு, தாக்குதலில் ஈடுபட்ட நபரை குறி வைத்தோம்.  எங்களிடம் பிடிபட்டு விடக் கூடாது என்பதால், குற்றவாளி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தான்.

சம்பவ இடத்துக்கு வந்து சில நிமிடங்களில் இதனை கண்டுபிடித்தோம். இதற்கு சிறப்பு வாய்ந்த பயிற்சியே காரணம். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பலியாவதில் இருந்து காப்பாற்றப்பட்டனர். அமெரிக்க மக்கள் முதலில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மும்பை தாக்குதலின் போது அங்குச் சென்று சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்ட போது கிடைத்த பாடமே, தற்போது லாஸ் வேகாஸ் தாக்குதலை சாமர்த்தியமாக எதிர்கொள்ள உதவியது. உடனடியாக 'தாக்குதல் வரும் இடத்தை கண்டறிந்து அதனை தடுப்பது' என்ற முடிவை எடுக்க முடிந்தது என்றார்.

சம்பவம் குறித்துப் பேசிய மற்றொரு அதிகாரி, குற்றவாளியின் அறையில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அறை முழுவதும் சூட்கேஸ்கள் நிறைய துப்பாக்கிகள் இருந்தன. அந்த அறையைப் பார்க்கவே ஒரு துப்பாக்கிக் கடை போல காட்சி அளித்தது.

அவனது அறையை லோம்பார்டோ அடைந்து தாக்குதலை தொடங்கியதுமே பட்டோக் துப்பாக்கிச் சூட்டை நிறுத்திவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். ஆனால், அவன் எப்போது தற்கொலை செய்து கொண்டான் என்பது யாருக்குமே தெரியவில்லை.

கொலையாளி பற்றியும், சம்பவம் பற்றியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புகள் கிடைத்தாலும், பட்டோக்கின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கான காரணம் பற்றி தெரியவரவில்லை.  அவன் மீது எந்தவொரு குற்ற வழக்கும் இல்லை, மேலும், இந்த தாக்குதல் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com