காடலோனியா சுதந்திரப் பிரகடனம் தள்ளிவைப்பு ஒரு கபட நாடகம்: ஸ்பெயின் சாடல்

ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான தீர்மானத்தைத் தள்ளிவைக்குமாறு காடலோனியா மாகாணப் பேரவையிடம் அதன் அதிபர் கார்லஸ் பூக்டெமன்ட் கூறியிருப்பது, அவரது கபட நாடகம் என்று ஸ்பெயின்
காடலோனியா மாகாணப் பேரவையில் சுதந்திரப் பிரகடனத் தீர்மானம் தள்ளிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை அவசர அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்.
காடலோனியா மாகாணப் பேரவையில் சுதந்திரப் பிரகடனத் தீர்மானம் தள்ளிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை அவசர அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்.

ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான தீர்மானத்தைத் தள்ளிவைக்குமாறு காடலோனியா மாகாணப் பேரவையிடம் அதன் அதிபர் கார்லஸ் பூக்டெமன்ட் கூறியிருப்பது, அவரது கபட நாடகம் என்று ஸ்பெயின் சாடியுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸின் 'யூரோப்-1' வானொலியில் ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் அல்ஃபோன்ஸா டஸ்டிஸ் புதன்கிழமை கூறியதாவது:
ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான காடலோனியாவை தனி நாடாக அறிவிக்க நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது. சுயாட்சிப் பிரதேசத்தில் தற்போது பிரிவினைவாதிகளின் கட்சி ஆட்சியில் உள்ளது. 
இந்நிலையில், ஸ்பெயினிலிருந்து பிரிவது குறித்த பொதுவாக்கெடுப்பை இந்த மாதம் 1-ஆம் தேதி காடலோனியா அரசு நடத்தியது. அதில், மாகாணத்தை தனிநாடாக அறிவிக்க பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், சுதந்திரப் பிரகடன மசோதாவை மாகாணப் பேரவையில் தாக்கல் செய்வோம் என்று காடலோனிய அதிபர் கார்லஸ் மிரட்டி வந்தார்.
எனினும், அந்த வாக்கெடுப்புக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது என்று ஸ்பெயின் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. வாக்குப் பெட்டிகள் போன்ற பொருட்களைப் பறிமுதல் செய்யவும் அரசு உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றங்களும் பொது வாக்கெடுப்பு அரசியல் சாசனத்துக்குப் புறம்பானது என்று அறிவித்துள்ளன.
இந்த நிலையில், காடலோனியாவை தனி நாடாக அறிவிக்கும் மசோதாவை தள்ளிவைக்கும்படி மாகாணப் பேரவையை அதன் அதிபர் கார்லஸ் கேட்டுக்கொண்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து ஸ்பெயின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அவர் கூறினார்.
இதுகுறித்து 'யூரோப்-1' வானொலியில் ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் அல்ஃபோன்ஸா டஸ்டிஸ் கூறியதாவது:
சுதந்திரப் பிரகடனத்தைத் தள்ளிவைக்கும் காடலோனியா அதிபரின் அறிவிப்பு, ஒரு தந்திரவேலையாகும். ஸ்பெயினின் உறுதியான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, அவர் கபட நாடகமாடுகிறார்.
அவர் எப்போதையும் போல, காடலோனியாவை பொருளாதார மற்றும் சமூகச் சிக்கலை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார்.
அவரே சட்டவிரோதமாக பொதுவாக்கெடுப்பை நடத்தி, அவரே அதில் வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டு, தற்போது அவரே அந்தப் பொதுவாக்கெடுப்பின் பலனைத் தள்ளிப் போடுவதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார் அவர்.
இதுகுறித்து பிரான்ஸுக்கான ஸ்பெயின் தூதர் ஃபெர்ணாண்டா காடெரேரா கூறுகையில், 'ஸ்பெயினடமிருந்து காடலோனியா சுதந்திரம் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இல்லாத ஒன்றை காடலோனியா அதிபரால் தள்ளிவைக்க முடியாது' என்றார்.
முன்னதாக, காடலோனியா மாகாண அரசு தனது பிரிவினைவாதப் போக்கைக் கைவிடாவிட்டால் அந்தப் பிரதேசத்தின் சுயாட்சி அதிகாரத்தையே ரத்து செய்ய வேண்டி வரும் என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் எச்சரித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'தனி நாடு அறிவிப்பு மசோதாவைத் தாக்கல் செய்யும் திட்டத்தை காடலோனியா மாகாண அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அரசியல் சாசனத்துக்கு எதிராக பிரதேச அரசு எடுக்கும் எந்த முடிவினாலும் ஒரு பயனும் கிடையாது. சட்டத்துக்குப் புறம்பான அறிவிப்புகள், மாகாணப் பேரவை நடவடிக்கைகள் இருக்குமானால் அதன் விளைவுகளைப் பிரிவினைவாதிகள் சந்தித்தே ஆக வேண்டும். தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துமீறினால், தற்போதுள்ள சுயாட்சி அதிகாரத்தை ரத்து செய்யவும் மத்திய அரசு தயங்காது. 
ஆனால் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுப்போம்' என்று எச்சரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com