ஊழல் வழக்கு: நவாஸ் மகன்கள் நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு மாத அவகாசம்

ஊழல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு மாத கால அவகாசம் அளித்து நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

ஊழல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு மாத கால அவகாசம் அளித்து நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
பனாமா ஆவணக் கசிவைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த நீதிமன்ற விசாரணைக்கு நவாஸ் ஷெரீஃப், அவரது மகன்களான ஹசன் ஷெரீஃப், ஹுசேன் ஷெரீஃப், மகள் மரியம், அவரது கணவர் முகமது சஃப்தர் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, நவாஸ் ஷெரீஃப் மனைவி குல்ஸýம் நவாஸ் பிரிட்டன் தலைநகர் லண்டனில் புற்று நோய் அறுவை சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். அவரை நலம் விசாரிக்க நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் லண்டன் சென்றனர். எனவே வழக்கு தொடர்பான முதல் நாள் விசாரணையில் நவாஸ் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக கைது உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். பிறகு நவாஸ் ஷெரீஃப் அடுத்த விசாரணையில் கலந்து கொண்டார். ஆனால் தங்களின் தாய்க்கு உதவியாக இருப்பதற்காக மகளும் மகன்களும் லண்டனில் தங்கியுள்ளனர் என்று நவாஸ் தெரிவித்தார். 
மகள் மரியம் மற்றும் அவரது கணவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது சஃப்தரும் கடந்த வாரம் நாடு திரும்பினர். லண்டனிலிருந்து அவர்கள் பயணம் செய்த விமானம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் தரையிறங்கியதுமே முகமது சஃப்தரை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மரியம் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளின்போது நவாஸ் ஷெரீஃபின் மகன்கள் ஹசனும் ஹுசேனும் ஆஜராகாமல் லண்டனிலேயே உள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு வர மறுக்கும் அவ்விருவரையும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு ஆணையம் நீதிபதியிடம் கோரியது.
ஆனால் அந்தக் கோரிக்கைய நீதிபதி ஏற்கவில்லை. ஹசன், ஹுசேன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு மாத கால அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வரும் நவ. 10-ஆம் தேதி நடைபெறவிருக்கும் விசாரணையில் அவர்கள் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, நவாஸ் ஷெரீஃப், மகள் மரியம், மருமகன் முகமது சஃப்தர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது.
"நவாஸ் மகன்கள் பிரிட்டன் பிரஜைகள்' ஊழல் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃபின் மகன்களான ஹசன் ஷெரீஃப் மற்றும் ஹுசேன் ஷெரீஃப் பாகிஸ்தான் பிரஜைகள் அல்ல என்று ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி மூத்த தலைவர் பெர்வேஸ் ரஷீத் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஹசன், ஹுசேன் ஆகிய இருவரும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள் அல்ல. அவ்விருவரும் பிரிட்டன் பிரஜைகள். பிரிட்டன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள். அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தொழில் நடத்தி வருகின்றனர். பிரிட்டன், சவூதி உள்ளிட்ட வெளிநாடுகளில் அவர்களுக்கு சொத்தும் தொழிலும் இருப்பது அனைவரும் அறிந்தது. 
அங்கு அவர்களின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளலாம். ஆனால் பாகிஸ்தானில் நடக்கும் வழக்கு விசாரணையில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.
அதே வேளையில், நவாஸ் ஷெரீஃப், அவருடைய மகள் மரியம், மருமகன் முகமது சஃப்தர் ஆகியோருக்கு எதிராக வழக்கு இருந்தால் அவர்கள் அதனை சந்திப்பார்கள். 
சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வழக்குகளை அவர்கள் சந்திப்பார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com