அமெரிக்காவில் இந்தியாவுக்கு சாதகமான நிலை உள்ளது: அருண் ஜேட்லி

அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவுக்கு சாதகமான மனநிலை இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
அமெரிக்காவில் இந்தியாவுக்கு சாதகமான நிலை உள்ளது: அருண் ஜேட்லி

அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவுக்கு சாதகமான மனநிலை இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
ஒருவார கால அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேட்லி, வாஷிங்டனில் உள்ள சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை இந்திய தொழில் வர்த்தக சங்கங்களில் கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த மாதிரியான பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் சிறப்பான புரிதல் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 4 நாள்களாக பல்வேறு தரப்பு முதலீட்டாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளித்தேன். இதன் மூலம் அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவுக்கு சாதகமான மனநிலை உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்படும் பயன்களை அனுபவிக்க இந்தியா தயாராகி வருகிறது. ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி, தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிதாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை இப்போதைய மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
சர்வதேச அளவிலும் இப்போது அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்தியாவும் அதனைப் பின்பற்றி வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த 3 ஆண்டுகள் சற்று கடினமான காலக்கட்டம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்தியாவில் முதலீட்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. உலகின் அதிக அளவு தாராளமயத்தைப் பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதே நேரத்தில் பல்வேறு நாடுகளில் இல்லாத அளவுக்கு மிகச்சிறந்த மனிதவளத்தையும் இந்தியா கொண்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய அரசு இப்போது இந்தியாவில் உள்ளது. கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறை உள்பட பல்வேறு துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அத்துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன என்றார் ஜேட்லி.
முன்னதாக, அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவ் நுச்சின், வர்த்தக அமைச்சர் வில்ஃபர் ரோஸ் ஆகியோரை அருண் ஜேட்லி தனித்தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்ப இருக்கிறார். அதற்கு முன்பு சனிக்கிழமை, வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கிறார். சர்வதேச செலாவணி நிதியத்தின் நிதிக் குழு (ஐஎம்எஃப்சி) கூட்டத்திலும் பங்கேற்க இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com