ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினரின் அணிவகுப்பு (கோப்புப் படம்).
ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினரின் அணிவகுப்பு (கோப்புப் படம்).

"ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படைக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை'

ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை எதிரான அறிவிப்புகள் உள்பட அந்த நாட்டுக்கு எதிராகப் புதிய நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று அதிபர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை எதிரான அறிவிப்புகள் உள்பட அந்த நாட்டுக்கு எதிராகப் புதிய நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று அதிபர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அதில் குறிப்பிட்டிருப்பது: ஈரான் தொடர்பான புதிய கொள்கையை அதிபர் டிரம்ப் அறிவிக்கவிருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றம், நட்பு நாடுகள் ஆகியவற்றின் யோசனைகளை அறிந்து புதிய ஈரான் கொள்கையை அதிபர் டிரம்ப் வகுத்துள்ளார். அமெரிக்க நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாகப் புதிய கொள்கை அமையும். அந்தக் கொள்கை மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க நட்பு நாடுகளின் நலனைக் காப்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும். பிராந்திய அமைதியைக் குலைக்கும் ஈரானின் சதி வேலைகள் முறியடிக்கப்பட வேண்டும். ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் சதி வேலைகளுக்கு அந்நாடு நிதி ஒதுக்குவது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும். ஈரான் அணு ஆயுதத் திறன் பெறுவதற்கான அனைத்து வழிகளையும் முடக்க வேண்டும். அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை ஈரான் குவித்துள்ளது. அதனை எதிர்கொள்ளும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காக வல்லரசு நாடுகளுடன் ஏற்படுத்திய ஒப்பந்தப்படி, அந்நாட்டின் அணு ஆயுத ஆராய்ச்சிகளை அடுத்த 15 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் சர்வதேச அணு சக்தி அமைப்பு ஆய்வாளர்களை ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளாமல் அந்த நாடு தடுத்து வருகிறது. இவை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அதிபர் டிரம்ப் வெளியிடுவார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.
பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகியவற்றுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை உதவி அளித்து வருகிறது என்று அமெரிக்கா நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகிறது. யேமன், சிரியாவில் அமெரிக்க நலனுக்கு எதிராக ஈரான் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்புகளைத் தவிர, ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த அறிவிப்பையும் டிரம்ப் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையை பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா அறிவிக்கும் என்று ஒருசிலர் கூறி வந்தாலும் அதனை அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com