தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை: பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக அறிவிப்பு

தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை: பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக அறிவிப்பு

இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் 9-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் சியாமென் நகரில் 4, 5-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமர் புதின், பிரேசில் அதிபர் மைக்கெல் டெமெர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜாகப் சூமா ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு கோவாவில் 8-ஆவது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. அப்போது இந்தியா கொண்டு வந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் இம்முறை நடைபெற்ற கூட்டத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரிக்ஸ் மாநாட்டில் தீவிரவாதத்துக்கு எதிரான தீர்மானத்தில் கூறப்பட்டதாவது:

எந்த விதத்திலும் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். அதில் எவ்வித நிபந்தனைகளும் இல்லை. தீவிவாதத்துக்கு விளக்கங்கள் தேவையில்லை.

அது முற்றிலும் அழிக்கபட வேண்டியதாகும். உலகம் முழுவதும் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விதிமுறைகளின் படி தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் கூட்டாக போராட வேண்டும். இதனால் அனைத்து நாடுகளின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட வேண்டும்.

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தீவிரவாத செயல்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக ஐநா தலைவரிடம் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அளிக்க உள்ளோம் என்றிருந்தது.

இதில், பாகிஸ்தான் நாட்டை நேரடியாக குறிப்பிடாமல் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் நாடுகளின் மீது சர்வதேச தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தாலிபான், லஷ்கர்-இ-தொய்பா, அல்கெய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஜெய்ஷ்-இ-முகமது, ஹிசாபுல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிக்ஸ் கூட்டமைப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் இடையிலான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறான்.

அதனால் ஐநா சபையால் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளான். ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com