வட கொரியாவின் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை

சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வட கொரியா ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை செய்தது.
ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு முன்பாக அணு ஆய்வு மையத்தைப் பார்வையிடும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்.
ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு முன்பாக அணு ஆய்வு மையத்தைப் பார்வையிடும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்.

சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வட கொரியா ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை செய்தது.

வட கொரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹம்கியோங் மாகாணத்தில் கில்ஜு என்னுமிடத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.29 மணிக்கு (இந்திய நேரம் காலை 9.29 மணி) இந்த சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் அணு குண்டுப் பரிசோதனை நடைபெற்றது என்று அரசு தொலைக்காட்சியில் அறிவிப்புச் செய்தி வெளியிடப்பட்டது. ஹைட்ரஜன் அணு குண்டு பரிசோதனை மகத்தான வெற்றி பெற்றதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு நிலைகளில் சோதனை நடைபெற்றதாகவும், முன்னெப்போதையும் விட மிக அதிகத் திறன் கொண்டதாகவும் அந்த வெடிகுண்டு அமைந்தது என்றும் வட கொரிய அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.
முன்னதாக, வட கொரியாவின் அணு ஆராய்ச்சி மையத்துக்கு அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் சென்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும், சக்தி வாய்ந்த அணு குண்டையும் பார்வையிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த சோதனை மூலம் 50 ஆயிரம் டன் முதல் 60 ஆயிரம் டன் வரையிலான அணு குண்டு வெடித் திறன் பெற்றதாகத் தென் கொரிய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை வட கொரிய நிகழ்த்திய சோதனைகளிலேயே இதுவே மிகவும் சக்தி வாய்ந்தது என்று தென் கொரியா கூறியுள்ளது.
பூமிக்கு அடியில் நிகழ்த்தப்பட்ட இந்த அணு குண்டு சோதனையைத் தொடர்ந்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 5.7 அலகுகளாகப் பதிவானது என்று தென் கொரிய வானியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவதாக நிலநடுக்கம் போன்ற ஓர் அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் சீன நிலநடுக்க ஆய்வு மையமும் தெரிவித்தன.
ஆனால் அது குண்டு வெடிப்பு சோதனையைத் தொடர்ந்து பூமிக்கு அடியில் பாறைகள் குலைந்து சரிந்ததால் ஏற்பட்ட அதிர்வாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
வட கொரியா மேற்கொண்ட அணு குண்டு சோதனை வரிசையில் இது ஆறாவதாகும். இதற்கு முந்தைய இரு அணு குண்டு சோதனைகள் கடந்த 2016-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டன. இதனிடையே ஏராளமான ஏவுகணை சோதனைகளையும் மேற்கொண்டது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் கூற்றுப்படியே அவற்றில் பெரும்பாலும் வெற்றிகரமானவை. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம். ரக ஏவுகணையையும் வெற்றிகரமாக வட கொரியா பரிசோதித்துள்ளது. அமெரிக்காவின் எந்த முக்கிய நகரத்தையும் தாக்கும் வல்லமையை பெற்றுவிட்டதாக வட கொரியா கூறி வருகிறது. இந்தப் புதிய ஹைட்ரஜன் குண்டு சோதனை பதற்ற நிலையை மிகவும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஜப்பான் பிரதமர் கண்டனம்

வட கொரியாவின் ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே கடும் கண்டனம் தெரிவித்தார்.
"வட கொரியாவின் செயல்பாடுகள் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது; பிராந்தியத்தில் அமைதி நிலை மோசமடைந்து வருகிறது; வட கொரியாவின் புதிய அணு குண்டு சோதனையை ஜப்பான் வன்மையாக கண்டிக்கிறது' என்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயும் தொலைபேசியில் உரையாடினர் என்று ஜப்பான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குறிப்பாக வட கொரியா குறித்துப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. வட கொரியாவின் செயல்பாடுகளால் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை எவ்வாறு தணிப்பது என்பது குறித்து அவர்கள் உரையாடினர் என்று ஜப்பான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்களின் தொலைபேசி உரையாடல் வட கொரியாவின் ஹைட்ரஜன் அணு குண்டு சோதனை நடைபெற்ற செய்தி வெளியான பின்பு நிகழ்ந்ததா என்று குறிப்பிடப்படவில்லை.


சீனா எச்சரிக்கை

வட கொரியாவின் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் சீனா அதிருப்தி தெரிவித்ததுடன், வட கொரியா தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தது.
சர்வதேச தடைகளையும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் வட கொரியா அணு குண்டு சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிருப்தியை அளிக்கிறது. சீனா அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. வட கொரியா தனது செயல்பாடுகளைத் திருத்திக் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com