தூதரக அலுவலகங்களை மீண்டும் திறக்க வேண்டும்: ரஷியா எச்சரிக்கை

அமெரிக்காவில் மூடப்பட்டுள்ள ரஷியத் தூதரக அலுவலகங்களை மீண்டும் திறக்காவிட்டால், இரு நாடுகளின் உறவில் ஏற்படும் மாபெரும் விரிசலுக்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
தூதரக அலுவலகங்களை மீண்டும் திறக்க வேண்டும்: ரஷியா எச்சரிக்கை

அமெரிக்காவில் மூடப்பட்டுள்ள ரஷியத் தூதரக அலுவலகங்களை மீண்டும் திறக்காவிட்டால், இரு நாடுகளின் உறவில் ஏற்படும் மாபெரும் விரிசலுக்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:
சான் பிரான்சிஸ்கோ மற்றும் இரு இடங்களில் ரஷியாவின் தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது, மிகுந்த பகையுணர்வைத் தூண்டும் செயலாகும்.
அந்த அலுவலகங்களை உடனடியாகத் திறந்து, ரஷியத் தூதரகப் பணியாளர்கள் தங்கள் பணிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையேயான உறவு மிகுந்த மோசமடைவதற்கான பொறுப்பை அமெரிக்காதான் ஏற்க வேண்டும்.
தூதகரகங்களை மூடியதன் மூலம் சர்வதேச சட்டங்களை அமெரிக்கா அப்பட்டமாக மீறியுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் செயல்பட்டு வந்த ரஷிய துணை தூதரக அதிகாரிகள் அனைவரும் தூதரகக் கட்டடத்தைவிட்டு வெளியேறிவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
ரஷிய துணை தூதரகத்தை இரண்டே நாட்களில் மூட வேண்டும் என்று அமெரிக்க அரசு கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அந்த துணை தூதரகத்தில் பணியாற்றி வந்த ரஷியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். அந்தக் கட்டடம் தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் கட்டடம் முழுவதையும் சோதனையிட்ட பிறகு எவரும் அதில் இல்லை என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டு காவல் ஏற்படுத்தப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தைத் தவிர, வாஷிங்டனிலும் நியூயார்க்கிலும் செயல்பட்டு வந்த ரஷிய வெளியுறவுத் துறையின் துணை அலுவலகங்களையும் இரண்டு நாட்களில் மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது. அந்த இரு அலுவலகங்களும் மூடப்பட்டு தற்போது அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், "வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உத்தரவை ரஷியா நிறைவேற்றியுள்ளது. இந்தக் கட்டடங்களின் பயன்பாட்டை மட்டுமே அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அலுவலக அதிகாரிகள் எண்ணிக்கையைக் குறைப்பது, அவர்களை ரஷியாவுக்குத் திரும்பச் செல்ல உத்தரவிடுவது போன்ற நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தது.
உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா ஆயுத உதவி அளித்து வருவதையும், கிரீமியா பகுதியை ஆக்கிரமித்ததையும் கண்டித்து ரஷியா மீது அமெரிக்கா அண்மையில் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதையடுத்து, ரஷியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையைக் குறைக்க ரஷியா உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ரஷிய துணை தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com