மல்லையா நாடு கடத்தல் வழக்கு: நவ.20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மல்லையா நாடு கடத்தல் வழக்கு: நவ.20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக, பிரிட்டனில் மல்லையா தஞ்சமடைந்துள்ளார்.
இதனிடையே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி பிரிட்டனுக்கு மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, மல்லையாவை லண்டனில் வைத்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கைது செய்தனர். எனினும், ரூ.5 கோடி (65 ஆயிரம் பவுண்டு) பிணைத் தொகை செலுத்தி கைதான மூன்று மணிநேரத்திலேயே மல்லையா ஜாமீனில் வெளிவந்தார். எனினும், அவரது கடவுச்சீட்டுகள், நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கானது, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் அதிகாரப்பூர்வ விசாரணையானது டிசம்பர் 4-ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இருந்தபோதிலும், இருதரப்பு கருத்துகளை பதிவு செய்யும் வகையில், வழக்கின் இறுதி விசாரணைக்கு முந்தைய வாதங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில், இந்திய அரசு சார்பில் "கிரோன் பிராஸிக்யூஷன் சர்வீஸ்' என்ற வழக்காடு நிறுவனம் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறது. இந்த விசாரணைகளில் நேரில் ஆஜராவதிலிருந்து மல்லையாவுக்கு ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு, வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், விசாரணை நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் நோக்கில் மல்லையா தரப்பு வழக்குரைஞர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுபோன்ற நடவடிக்கைகளை மல்லையா தரப்பினர் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மல்லையாவை நாடு கடத்தும்பட்சத்தில் அவர் இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார், அந்த சிறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை இந்திய அரசிடமிருந்து பெற்றுவிட்டீர்களா? என்று நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த இந்தியத் தரப்பு வழக்குரைஞர்கள், இதுதொடர்பான பெரும்பாலான ஆவணங்கள் பெறப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com