ஐ.நா. தடையை மீறி வட கொரியா புதிய ஏவுகணை சோதனை

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல், வட கொரியா புதிய ஏவுகணை சோதனையை வெள்ளிக்கிழமை நிகழ்த்தியது.
வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக தென் கொரியா வெள்ளிக்கிழமை நிகழ்த்திய ஏவுகணை சோதனை. (உள்படம்) வட கொரியா செலுத்திய ஏவுகணையின் பாதையை விளக்கும் தொலைக்காட்சி செய்தி.
வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக தென் கொரியா வெள்ளிக்கிழமை நிகழ்த்திய ஏவுகணை சோதனை. (உள்படம்) வட கொரியா செலுத்திய ஏவுகணையின் பாதையை விளக்கும் தொலைக்காட்சி செய்தி.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல், வட கொரியா புதிய ஏவுகணை சோதனையை வெள்ளிக்கிழமை நிகழ்த்தியது.

உள்ளூர் நேரப்படி காலை 6.27 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணி) நடுத்தர ரக ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது.
வட கொரிய தலைநகர் பியோங்கியாங் அருகிலிருந்து செலுத்தப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பானின் வான் பகுதிய வழியாகப் பறந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. செலுத்தப்பட்ட பின்னர் சுமார் 770 கி.மீ. உயரத்தை எட்டிய பிறகு அது மீண்டும் பூமியை நோக்கிப் பறந்து நடுக்கடலில் விழுந்தது. வட கொரிய கடற்கரையிலிருந்து சுமார் 3,700 கி.மீ. தொலைவு அது பறந்துள்ளது. இதுவரை வட கொரியா செலுத்தியதிலேயே மிக நீண்ட தொலைவு பறந்துள்ள ஏவுகணை இதுதான். இந்தத் தகவலை தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்த ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்க கடற்படையின் பசிபிக் படைப் பிரிவு உறுதி செய்தது. அந்தப் படைப் பிரிவின் தலைமையகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: நடுத்தர ரக ஏவுகணை பரிசோதனையை வட கொரியா மேற்கொண்டது. இந்த சோதனையால் வடக்கு அமெரிக்க கண்டத்துக்கோ, அமெரிக்க அதிகாரத்துக்கு உள்பட்ட பசிபிக் தீவுப் பகுதியான குவாமுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் இதே போன்ற நடுத்தர ரக ஏவுகணையை ஜப்பான் வான் பகுதி வழியாக வட கொரியா செலுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஓர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு ஏவுகணை சோதனைகளுக்கு இடையே மிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை அந்த நாடு மேற்கொண்டது. அந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனைக்குப் பிறகு வட கொரியா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த திங்கள்கிழமை விதித்தது. ஆனால் பொருளாதாரத் தடைகளை சற்றும் பொருட்படுத்தாமல் வட கொரியா புதிய நடுத்தர ரக ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருக்கிறது.
இந்த ஏவுகணை சோதனைக்கு ரஷியாவும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி வட கொரியா நடந்து கொள்ள வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு என்று சீன வெளியறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறினார்.
வட கொரியாவின் நெருங்கிய நாடுகளான சீனாவும் ரஷியாவும் அந்த நாட்டுக்கு நெருக்குதல் அளித்து, மோதல் போக்கைக் கைவிடும்படி அறிவுறுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறினார்.


தென் கொரியா பதிலடி

வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாகத் தனது நடுத்தர ஏவுகணையை தென் கொரியா வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியது. மேலும் எல்லைப் பகுதியில் புதிய ராணுவ போர்ப்பயிற்சி மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்தது.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் புறந்தள்ளி வட கொரியா புதிய ஏவுகணை சோதனையை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அவசரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிகிறது.
இதுவரை வட கொரியாவுக்கு எதிராக 8 பொருளாதாரத் தடை உத்தரவுகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com