முடிவுக்கு வந்தது "கேசினி' விண்கலத்தின் ஆய்வுப் பயணம்

சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் கடந்த 1997-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட "கேசினி' விண்கலம், தனது செயல்பாட்டை வெள்ளிக்கிழமையுடன் நிறுத்திக் கொண்டது.
முடிவுக்கு வந்தது "கேசினி' விண்கலத்தின் ஆய்வுப் பயணம்

சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் கடந்த 1997-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட "கேசினி' விண்கலம், தனது செயல்பாட்டை வெள்ளிக்கிழமையுடன் நிறுத்திக் கொண்டது.

ஏறத்தாழ 20 ஆண்டு கால ஆராய்ச்சியில் 4.5 லட்சம் புகைப்படங்களையும், பல லட்சக்கணக்கான தரவுகளையும் அந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது. சனி கிரகத்தை இவ்வளவு நெருக்கமாகவும், துல்லியமாகவும் இதுவரை எந்த விண்கலமும் ஆய்வு செய்யவில்லை என்று பெருமைபடக் கூறியுள்ள நாசா விஞ்ஞானிகள், இத்திட்டத்தில் பங்களித்த அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய கோளாகக் கருதப்படும் சனி கிரகத்தை ஆய்வு செய்ய நாசா விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதன்படி, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஎஸ்ஏ), இத்தாலிய வான்வெளி ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் "கேசினி' விண்கலத்தை நாசா வடிவமைத்தது. அது, கடந்த 1997-ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமிக்கு அருகே ஒரு நிலவு இருப்பதுபோல, சனி கிரகத்தை சுற்றிலும் எண்ணற்ற நிலவுகள் (துணைக் கோள்கள்) உள்ளன. அவற்றில் 62 நிலவுகளைப் பற்றிய ஆய்வுகளை "கேசினி' விண்கலம் மேற்கொண்டது. அதுமட்டுமன்றி, வாயுக்களால் நிரம்பியிருக்கும் பிரம்மாண்ட கோளான சனி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்கு மிக அருகில் சென்று புகைப்படங்களையும், தரவுகளையும் எடுத்து பூமிக்கு அனுப்பியது.
இந்நிலையில், சனி கிரகத்தின் உள்பரப்புக்குள் "கேசினி' விண்கலத்தைச் செலுத்த நாசா விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதனால், அந்த விண்கலத்தின் தொடர்புகள் துண்டிக்கப்படும் என்று தெரிந்திருந்தும், அடுத்தக்கட்ட சோதனைக்காக அத்தகைய முயற்சிகளை அவர்கள் முன்னெடுத்தனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று அந்த கிரகத்தின் வளிமண்டலத்துக்குள் "கேசினி' விண்கலம் செலுத்தப்பட்டது. அதற்கு அடுத்த சில நிமிடங்களில் பூமியுடனான அதன் தொடர்புகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. செயல்பாடுகளை இழப்பதற்கு கடைசி விநாடி வரையிலும் ஆய்வுத் தகவல்களை "கேசினி' விண்கலம் பூமிக்கு அனுப்பியதாக நாசா விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
சனி கிரகத்தின் ஓர் அங்கமாக இனி "கேசினி" விளங்கப்போவதாகவும் அவர்கள் உருக்கமாகக் கூறியுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் 20 ஆண்டுகளாக கோலோச்சி வந்த ஓர் அறிவியல் சகாப்தம், காலத்தின்கட்டாயத்தால் முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com