அமெரிக்காவுக்கு இணையாக அணு ஆயுதத் திறன் பெறுவதே குறிக்கோள்: வட கொரியா

அமெரிக்காவுக்கு இணையாக அணு ஆயுதத் திறன் பெறுவதுதான் வட கொரியாவின் குறிக்கோள் என்று அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு இணையாக அணு ஆயுதத் திறன் பெறுவதே குறிக்கோள்: வட கொரியா

அமெரிக்காவுக்கு இணையாக அணு ஆயுதத் திறன் பெறுவதுதான் வட கொரியாவின் குறிக்கோள் என்று அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்தார்.
புதிய நடுத்தர ரக ஏவுகணை சோதனையை வட கொரியா வெள்ளிக்கிழமை மேற்கொண்டது. வெற்றிகரமான அந்த சோதனையை அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் நேரடியாகப் பார்வையிட்டு அதன் உருவாக்கத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகளைப் பாராட்டினார் என்று அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. சனிக்கிழமை தெரிவித்தது. அந்த ஏவுகணை சோதனை குறித்து அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்தது: 
வட கொரியாவின் ஆயுதத் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். நமது போர்த்திறனும் தாக்குதல் திறனும் மேலும் அதிகரித்துள்ளன. எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நமது அணு ஆயுதங்கள் உருவாக்கும் திட்டம் நிறைவேற்றப்படும். கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான தடைகளை மீறி வட கொரியா தனது ஆயுதத் திறனை வளர்த்து வந்துள்ளது. உலகமே அதனை இப்போது ஒப்புக் கொண்டுள்ளது. அணு ஆயுதத் திறனில் அமெரிக்காவுடன் சம நிலை பெற வேண்டும். அமெரிக்காவுக்கு இணையான அணு ஆயுதத் திறனைப் பெற்றால்தான் நம் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றிப் பேசுவதை அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் நிறுத்துவார்கள். 
இன்னும் பல ஏவுகணை சோதனைகள் நடைபெறும். நமது ஆயுதத் திறன் அதிகரித்தால் தாக்குதல் திறனும் போர்த் திறனும் அதிகரிக்கும். நம் மீது தாக்குதல் நிகழ்த்தினால், அணு ஆயுதம் கொண்டு நாம் நடத்தும் பதிலடித் தாக்குதலை அமெரிக்கா தாங்க முடியாத அளவுக்கு நமது திறனை அதிகரிக்கச் செய்ய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதாக வட கொரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த சில நாட்களிலேயே அந்நாடு சக்தி வாய்ந்த நடுத்தர ஏவுகணையை சோதனை செய்தது. இந்த நடவடிக்கை பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தை சாத்தியமில்லை: தென் கொரியா

வட கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது சாத்தியமே இல்லை என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் தெரிவித்தார்.
வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அவர் கூறியது: பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் தற்போது அந்த வழிமுறை தகுந்த பலனை அளிக்கும் நிலையைக் கடந்து விட்டது. கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்த உடனேயே சக்தி வாய்ந்த ஆயுத சோதனையை வட கொரியா நிகழ்த்தியிருக்கிறது. இனி பேச்சுவார்த்தை என்பது சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும்.
தென் கொரியாவையும் அதன் நட்பு நாடுகளையும் சீண்டும் விதமாகவும் அச்சுறுத்தல் நேரும் விதமாகவும் வட கொரியா நடந்து கொள்ள முயற்சி செய்தால், ஆரம்ப கட்டத்திலேயே அதனைத் தடுத்து, திருப்பியடிக்கும் திறன் தென் கொரியாவுக்கு உள்ளது. அப்படிப்பட்ட தாக்குதலிலிருந்து வட கொரியா மீளவே முடியாது என்று அவர் கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு  கவுன்சில் கண்டனம்

வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com