தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டு சிறை

சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தின் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை 
யிங்லக்குக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி உச்ச நீதிமன்றம் எதிரே புதன்கிழமை குவிந்த அவரது ஆதரவாளர்கள். (வலது) யிங்லக் ஷினவத்ரா (கோப்புப் படம்)
யிங்லக்குக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி உச்ச நீதிமன்றம் எதிரே புதன்கிழமை குவிந்த அவரது ஆதரவாளர்கள். (வலது) யிங்லக் ஷினவத்ரா (கோப்புப் படம்)

சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தின் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இந்த வழக்கில் சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்காக, அவர் ஏற்கெனவே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையிலேயே இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், தனது அரசியல் வாழ்வை நிர்மூலமாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி என்றும் யிங்லக் ஷினவத்ரா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் காவல்துறை அதிகாரியும், தொலைத்தொடர்புத் துறை தொழிலதிபருமான யிங்லக் ஷினவத்ராவின் சகோதரர் தாக்சின் ஷினவத்ரா, அரசியலில் இறங்கி 1998-ஆம் ஆண்டு தனிக் கட்சி தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்று, அவர் பிரதமரானார்.
எனினும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், அரசக் குடும்பத்தை அவமதித்தது போன்ற குற்றச்சாட்டுகளை தாக்சின் ஷினவத்ரா மீது சுமத்தி அவரது ஆட்சியை ராணுவம் 2006-ஆம் ஆண்டு கவிழ்த்தது. அதிலிருந்து, சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்காக தாக்சின் தாமாகவே வீட்டுச் சிறைக்குள் முடங்கினார்.
அதையடுத்து, தாக்சின் ஷினவத்ராவின் அரசியல் வாரிசாக உருவெடுத்த அவரது தங்கை யிங்லக் ஷினவத்ரா, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமரானார்.
ஆட்சிக்கு வந்ததும், அவரது தேர்தல் வெற்றிக்குக் கைகொடுத்த கவர்ச்சி மிக்க அரசி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்திய யிங்லக், அந்தத் திட்டத்தின் அமலாக்கத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். அந்தத் திட்டத்தின் அடிப்படையில், சர்வதேச சந்தை விலையைவிட 50 சதவீத அதிக விலைக்கு தாய்லாந்து விவசாயிகளிடமிருந்து அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.
எனினும், இந்தத் திட்டத்தின் காரணமாக, கையிருப்பு அரிசியின் அடக்கவிலை சர்வதேச விலையைவிட அதிகமானதால், தாய்லாந்திடமிருந்து அரிசி இறக்குமதி செய்ய மற்ற நாடுகள் தயக்கம் காட்டின. இதையடுத்து, அதுவரை அரிசி ஏற்றுமதியில் உலகின் முதலிடத்தை வகித்து வந்த தாய்லாந்து, அந்த இடத்தை இழந்தது. அந்த இடத்தை வியத்நாம் பிடித்துக் கொண்டது.
அதன் காரணமாக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அதைத் தொடர்ந்து, யிங்லக்கின் ஆட்சியை ராணுவம் கடந்த 2014-ஆம் ஆண்டு கலைத்தது. அதனைத் தொடர்ந்து, தனது பதவிக் காலத்தின்போது அலட்சியமாக செயல்பட்டதன் மூலம் அரசுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியாக யிங்லக் மீது வழக்கு தொடரப்பட்டது. 
அரிசி மானியத் திட்டத்தில் ஊழல்கள் நடைபெறுவதை சுட்டிக் காட்டியும், உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம் யிங்லக் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், ஒருசில குற்றச்சாட்டுகளிலிருந்து யிங்லக்கை விடுவித்தாலும், நிர்வாகத்தில் அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டை உறுதி செய்தது. இந்த நிலையில், அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்தத் தண்டனையை ஏற்கெனவே எதிர்பார்த்த யிங்லக் ஷினவத்ரா, ஏற்கெனவே சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com