அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு: சீனா விருப்பம்

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு: சீனா விருப்பம்

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
 சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாக இருப்பதைச்சுட்டிக் காட்டி, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அதிகரித்தார்.
 இதையடுத்து, சீனாவும் அமெரிக்காவில் இருந்து தாங்கள் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட வர்த்தகப் போர், அவ்விரு நாடுகளில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
 இந்த வர்த்தகப் போரால் இரு நாடுகளுக்குமே பாதிப்பு என்றாலும், அமெரிக்காவுக்கு அதிகஅளவு பொருள்களை ஏற்றுமதி செய்யும் சீனாவுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்பட்டது.
 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக உறவு இதுபோன்தொரு மோசமான நிலையைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
 இந்நிலையில், மே மாதத் தொடக்கத்தில் சீனாவுக்கு செல்ல அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவ் நுச்சின் திட்டமிட்டிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால், இந்தப் பயணம் நிகழுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
 இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் இது தொடர்பாக கூறியதாவது:
 அமெரிக்க அமைச்சரின் வருகையை சீனா மனதார வரவேற்கிறது. அவரது இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம், பொருளாதார விஷயங்கள் குறித்துப் பேசவும் சீனா தயாராக உள்ளது.
 சீன சந்தை வெளிநாடுகளுக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என்று அதிபர் ஷீ ஜின்பிங் ஏற்கெனவே உறுதியளித்துள்ளார். எனவே, வர்த்தகப் பிரச்னையைப் பேசித் தீர்ப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார்.
 முன்னதாக, கடந்த வாரம் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவ், சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிதியமைச்சக உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தகப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து சாதகமான கருத்துகளை அவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
 அதே நேரத்தில், சீன இறக்குமதிப் பொருள்கள் மீதான வரியை மேலும் இரு மடங்காக உயர்த்துவது குறித்து அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com