ஹெச் 4 விசா அனுமதி ரத்து: அமெரிக்க எம்.பி.க்கள், தொழில் துறையினர் எதிர்ப்பு

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா அடிப்படையில் தங்கிப் பணியாற்றும் வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர் பணியாற்றுவதற்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு
ஹெச் 4 விசா அனுமதி ரத்து: அமெரிக்க எம்.பி.க்கள், தொழில் துறையினர் எதிர்ப்பு

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா அடிப்படையில் தங்கிப் பணியாற்றும் வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர் பணியாற்றுவதற்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு அந்நாட்டு எம்.பி.க்களும், தொழில் துறையினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 அமெரிக்காவில் ஹெச்-1பி விசா அடிப்படையில் வெளிநாட்டினர் ஏரளாமானோர் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், தங்களது மனைவி அல்லது கணவரை ஹெச்-4 விசா அடிப்படையில் அமெரிக்காவுக்கு அழைத்து வரலாம். அவர்களும் அமெரிக்காவில் பணியாற்றலாம்.
 இந்தத் திட்டத்தை முந்தைய ஒபாமா அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
 இந்நிலையில், ஹெச்-4 விசா திட்டத்தை ரத்து செய்வது குறித்து டிரம்ப் நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தொழில் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஹெச்-4 விசா திட்டத்தின் கீழ் பணி அனுமதி வழங்குவதை ரத்து செய்வதற்கு அமெரிக்க குடியேற்ற சேவைகள் அலுவலகம் முடிவெடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
 இதையடுத்து, அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள எஃப்.டபிள்யூ.டி. என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ""ஹெச் 4 விசா அனுமதியை ரத்து செய்தால், அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும்; வேலையை இழப்பதால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, அரசு தனது முடிவைக் கைவிட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதேபோல், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 15 எம்.பி.க்கள், உள்துறைச் செயலர் கிறிஸ்ட்ஜென் எம்.நீல்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவில் பணியாற்றும் பொறியாளர்களின் திறமை மிக்க வாழ்க்கைத் துணைவர்களை பணியாற்ற அனுமதிப்பதால், அவர்களின் குடும்ப வருமானம் இரட்டிப்பாகிறது. அவர்களில் பலர், அமெரிக்காவில் முதலீடு செய்து, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பங்காற்றி வருகின்றனர்.
 அவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றினால், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, தங்களது திறமைகளை அமெரிக்க தொழில்துறைக்கு எதிராகப் பயன்படுத்துவர். ஹெச் 4 விசா அனுமதி விவகாரத்தில் நாட்டின் பொருளாதாரமும், வீட்டின் ஒற்றுமையும் அடங்கியுள்ளது. எனவே, அரசு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com