வாஜ்பாய் மறைவுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கல்

வாஜ்பாய் மறைவுக்கு அமெரிக்கா, ரஷியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் மறைவுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கல்


வாஜ்பாய் மறைவுக்கு அமெரிக்கா, ரஷியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஷியா: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தமது இரங்கல் செய்தியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், உலகெங்கிலும் வாஜ்பாய்க்கு மிகச் சரியான முறையில் மாபெரும் மரியாதை இருந்தது. ரஷியா - இந்தியா இடையே நட்புறவையும், உத்திசார் பாதுகாப்பு உறவையும் மேம்படுத்துவதற்காக தமது தனிப்பட்ட பங்களிப்பை அளித்த அரசியல் தலைவராக வாஜ்பாய் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
வாஜ்பாய் குடும்பத்தினர், இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ரஷிய அதிபரின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் போம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வாஜ்பாய் மறைவையொட்டி இந்திய மக்களுக்கு, அமெரிக்க மக்களின் சார்பில் எனது இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். 
அமெரிக்கா - இந்தியா இடையிலான நட்புறவின் மூலமாக உலகப் பொருளாதார வளத்தையும், அமைதியையும் மேம்படுத்த முடியும் என்பதை வாஜ்பாய் முன்னரே உணர்ந்திருந்தார். அவரது, தொலைநோக்கு சிந்தனை அடிப்படையிலான பலன்களை இருநாடுகளும் அனுபவித்து வருகின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்: இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்ட வாஜ்பாய் முன்னெடுத்த முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று அங்கு புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஆசிய துணை கண்டத்தின் முதன்மையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக வாஜ்பாய் இருந்ததாகவும், அவரது மறைவு மாபெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என்றும் இம்ரான் கான் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வந்தவர் வாஜ்பாய். சார்க் நாடுகளின் ஆதரவாளராகவும், வளர்ச்சியை ஏற்படுத்த பிராந்திய அளவிலான ஒத்துழைப்பை முன்னெடுத்தவராகவும் வாஜ்பாய் போற்றப்படுவார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நேபாளம்: நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி, அடல் பிகாரி வாஜ்பாய் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். வாஜ்பாய் மறைவின் மூலமாக ஒரு உயர்ந்த மனிதனை இவ்வுலகமும், இந்தியாவும் இழந்திருக்கின்றன. நேபாளத்தைப் பொருத்தவரையில் நல்ல நண்பரை, நல்லெண்ணம் கொண்டவரை இழந்திருக்கிறோம்.
சிறந்த மதிநுட்பம் மற்றும் இந்திய மக்களுக்காக சுயநலமின்றி ஆற்றிய சேவை ஆகியவற்றுக்காக வாஜ்பாய் என்றென்றும் நினைவுகூரப்படுவார்'' என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் தனித்தனியே இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிறீசேனா, சுட்டுரையில், இலங்கையின் உண்மையான நண்பரையும், மாபெரும் மனிதாபிமானம் உடையவரையும் நாம் இழந்திருக்கிறோம். வாஜ்பாய் ஒரு தொலைநோக்கு சிந்தனை உடையவர்; ஜனநாயகத்தை தீவிரமாக ஆதரித்தவர். உலகெங்கிலும் வாழும் அவரது ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கே, தாம் இதற்கு முன்பு 2002-2004 வரையில் இலங்கை பிரதமராக இருந்தபோது, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்புறவு கொண்டிருந்ததாகவும், அந்த மாமனிதரின் நட்பை என்றென்றும் நினைவுகூர்வேன் என்றும் கூறியுள்ளார்.
வங்கதேசம்: வாஜ்பாய் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவர் வங்கதேசத்தின் நல்ல நண்பராகவும், மதிப்புமிக்க தலைவராகவும் இருந்தார் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
தலாய் லாமா - திபெத் பெளத்த மதத் தலைவர்: வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நாங்கள் அவரை தொடர்ந்து சந்தித்து வந்தோம். அவர் ஓய்வு பெற்ற பிறகும் கூட வீட்டில் சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தோம். மிகச் சிறந்த தலைவரை இந்தியா இழந்திருக்கிறது. 
திபெத் மக்களுக்கான வாஜ்பாயின் ஆதரவு 1950-களில் தொடங்கியது. திபெத் குறித்து உறுதியான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்'' என்று தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் காயூம், மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகாநாத், பூடான் முன்னாள் பிரதமர் ஷெரிங் தோப்கே, இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் உள்பட பல்வேறு தரப்பினர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com