வங்கதேசம்: ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை

ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
வங்கதேசம்: ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை

ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
இதன் காரணமாக, இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடும் தகுதியை இழக்கக் கூடும் என்பதால் இந்தத் தீர்ப்பு அவருக்கு ஒரு மாபெரும் அரசியல் பின்னடைவு என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, இந்த ஊழல் வழக்கை விசாரித்து வரும் டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது அக்தாருஸாமன் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில் தெரிவித்ததாவது:
செயல்படாத அறக்கட்டளையின் பெயரில் பெரும் தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கலீதா ஜியா உள்ளிட்ட 6 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த ஊழல் குற்றத்துக்காக முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
மேலும், தலைமறைவாகியுள்ள அவரது மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் துணைத் தலைவருமான தாரிக் ரஹ்மான் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
கலீதா ஜியாவின் வயது மற்றும் சமூக அந்தஸ்து காரணமாக அவருக்கு மற்ற குற்றவாளிகளைவிட குறைவான சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் கலீதா ஜியா, தாரிக் ரஹ்மான் தவிர முன்னாள் எம்.பி. காஜி சலீமுல் ஹக் கமால், தொழிலதிபர் சர்ஃபுதீன் அகமது, பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலர் கமாலுதீன் சித்திக்கி மற்றும் அவரது உறவினர் மோமினுர் ரஹ்மான் ஆகியோருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஹெச்.எம். எர்ஷாதுக்குப் பிறகு, ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள முதல் முன்னாள் ஆட்சியாளர் கலீதா ஜியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் 6 பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பால், வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் உள்பட வங்கதேசத்தின் எந்தத் தேர்தலிலும் கலீதா ஜியா போட்டியிட முடியாத நிலைமை ஏற்படக் கூடும் என்பதால், இது அவரது அரசியல் எதிர்காலத்தையே முடக்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக கலீதா ஜியாவின் தலைமை வழக்குரைஞர் காண்ட்கர் மெஹபூப் ஹுசைன் தெரிவித்தார்.
தீர்ப்பு வாசிக்கப்பட்ட உடனேயே கலீதா ஜியாவை காவல் துறை வாகனத்தில் டாக்காவிலுள்ள மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். அந்தச் சிறையில் கலீதா ஜியாவைத் தங்க வைப்பதற்காகவே புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்: கலீதாவுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட அவரது தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சியின் தொண்டர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவரை வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதன் காரணமாக போலீஸாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர்.
இதற்கிடையே, கலீதா ஜியாவுக்கு எதிரான இந்த வழக்கை ராணுவ ஆதரவு பெற்ற முந்தைய இடைக்கால அரசுதான் தொடர்ந்ததாகவும், ஆளும் அவாமி லீக் கட்சிக்கு இந்த வழக்குடன் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் உபைதுல் காதர் தெரிவித்தார்.
"ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை'க்காக வெளிநாடுகளிலிருந்து 2.52 லட்சம் டாலரை (சுமார் ரூ.1.6 கோடி) முறைகேடாகப் பெற்றதாக, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (72), அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவிலுள்ள அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
கலிதா ஜியாவின் கணவரும், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மற்றும் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை, ஏட்டளவில் மட்டுமே இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கலீதா ஜியாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் அவரது கட்சியினர் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதால், 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேச தேசியவாதக் கட்சியினரை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனர்.
மேலும், முக்கிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீர்ப்பைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச தேசியவாத 
கட்சித் தொண்டர்களை தடியடி நடத்திக் கலைக்கும் போலீஸார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com