ஊழல் குற்றச்சாட்டு: தென் ஆப்பிரிக்க அதிபருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு எதிராக ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வியாழக்கிழமை (பிப். 15) நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில், அதிபர் ஜேக்கப் ஜூமாவின் ஊழல்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் குப்தா இல்லத்தில்  திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில், அதிபர் ஜேக்கப் ஜூமாவின் ஊழல்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் குப்தா இல்லத்தில்  திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு எதிராக ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வியாழக்கிழமை (பிப். 15) நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் பொருளாளர் பால் மாஷடைல் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
அதிபர் ஜேக்கப் ஜூமாவை பதவியிலிருந்து நீக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வியாழக்கிழமை கொண்டு வரும்படி கட்சியின் தலைமை கொறடாவைக் கேட்டுக் கொண்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து, நாட்டின் அடுத்த அதிபராக கட்சித் தலைவர் சிரில் ராமபோஸா தேர்ந்தெடுக்கப்படுவார். 
பதவியிலிருந்து விலகும்படி கட்சியின் சார்பில் ஏற்கனவே ஜூமாவிடம் வலியுறுத்திவிட்டோம். எனவே, அவரது பதிலுக்காக இனியும் எங்களால் காத்திருக்க முடியாது. நாட்டையும் காக்க வைத்திருக்க முடியாது. அவரை பதவியிலிருந்து நீக்கும் எங்களது முடிவை உடனடியாக அமல்படுத்தியே ஆக வேண்டும் என்றார் மாஷடைல்.
ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பலம் இருப்பதால், அதிபர் ஜூமாவுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானம் எளிதில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, பிரிடோரியா நகருக்கு வெளியே அமைந்துள்ள ஹோட்டலொன்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 107 உறுப்பினர்கள் அடங்கிய கட்சியின் தேசிய செயற்குழு ஜூமாவை பதவியிலிருந்து நீக்க முடிவு செய்தது.
ஆப்பிரிக்க அரசியல் சாசனத்தின்படி, ஒரு அதிபரை பதவி விலகுமாறு கட்டளையிட அவர் சார்ந்துள்ள ஆளும் கட்சிக்கு அதிகாரம் உள்ளது. எனினும், அந்தக் கட்டளையை அதிபர் ஏற்றாக வேண்டிய கட்டாயம் இல்லை.
அந்த வகையில், அதிபர் ஜூமா பதவி விலக மறுப்பு தெரிவித்தால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அவரை பதவியிலிருந்து நீக்கும் என்று ஏற்கெனவே கூறப்பட்டது.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க அதிபராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேக்கப் ஜூமா (75), பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ளார்.
மேலும், நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, அதிகரித்து வரும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம் ஆகிய காரணங்களால் அவருக்கு எதிரான அதிருப்தி அலை வீசி வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே அதிபட்சமாக இருமுறை அதிபர் பொறுப்பை ஏற்றுள்ள ஜூமாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், அவரை பதவி விலகுமாறு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி கடந்த 4-ஆம் தேதி வலியுறுத்தியது. 
எனினும், அதனை ஏற்க ஜூமா மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, ஜோகன்னஸ்பர்க் நகரில், அதிபர் ஜூமாவின் ஊழல்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் குப்தா இல்லத்தில் அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com