'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை பாகிஸ்தான் பின்பற்றிச் செயல்படுவதில்லை'

பயங்கரவாதிகளுக்கு எதிரான தடைகள் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை பாகிஸ்தான் பின்பற்றிச் செயல்படுவதில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான தடைகள் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை பாகிஸ்தான் பின்பற்றிச் செயல்படுவதில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நிதிச் செயல்திட்ட அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) மாநாடு வரும் 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற உள்ளது. பயங்கரவாத விஷயத்தில் பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் வைக்குமாறு கோரி இந்த அமைப்பை அமெரிக்க அரசு அணுகியுள்ளதாக பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
மேலும், எஃப்ஏடிஎஃப் அமைப்பின் சர்வதேச பயங்கரவாத நிதியளிப்பு கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்க்க அமெரிக்காவும் இந்தியாவும் தீவிரமாக முயற்சித்து வருவதாக பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், வாஷிங்டனில் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் தனது கருப்புப் பணத் தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதித் தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறோம். அதேபோல், பயங்கரவாதிகளுக்கு எதிரான தடைகள் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267-ஆவது தீர்மானத்தைப் பின்பற்றி பாகிஸ்தான் செயல்படாதது தொடர்பாகவும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். 
பாகிஸ்தான் தொடர்பாக எடுக்க வேண்டிய உரிய நடவடிக்கைகளை எஃப்ஏடிஎஃப் அமைப்பின் மாநாடு தீர்மானிக்கும். அந்த அமைப்பின் விவாதங்கள் அனைத்தும் ரகசியமானவை. இந்த விவகாரத்தில் (பாகிஸ்தான் விவகாரம்) ஏதாவது ஒரு முடிவெடுக்கப்படும் வரை வெளிப்படையாக எந்தத் தகவலும் வழங்கப்படாது. அந்த அமைப்பின் விவாதங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக ரகசியம் காக்கப்படுவது மிகவும் முக்கியம் என்றார் அவர்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான தடைகள் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை பாகிஸ்தான் பின்பற்றிச் செயல்படுவதில்லை என்று அமெரிக்கா வெளிப்படையாகக் குற்றம்சாட்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com