அமைதிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

எல்லையிலும், நல்லுறவிலும் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கவில்லை என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

எல்லையிலும், நல்லுறவிலும் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கவில்லை என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தவே முயலுகிறது என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சர்வதேச உத்திசார் கல்வி நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அஹ்சன் இக்பால் பேசியதாவது:
இந்தியாவுடனான பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, இரு நாட்டு எல்லைகளிலும், நல்லுறவிலும் அமைதியான சூழலை உருவாக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அதற்
கான முயற்சிகளை முன்னெடுத்தார்.
இந்தியப் பிரதமர் மோடியுடன் அவர் நட்புறவுடன் செயல்பட்டு வந்தார். ஆனால், மறுபுறம் இந்தியா அமைதியை நிலைநாட்டுவதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. அதற்கு நேர் மாறாகவே செயல்பட்டது. உதாரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டில் சார்க் உச்சி மாநாட்டை பாகிஸ்தான் நடத்தியது. ஆனால், அதனை இந்தியா புறக்கணித்தது (காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து மத்திய அரசு இம்முடிவை எடுத்தது).
அதன் தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலையிலான பேச்சுவார்த்தைகளுக்கும் பல்வேறு தடைகளை இந்தியா விதித்தது. அவை அனைத்தும் எதிர்வினைகளாகவே முடிந்தன. அமைதியை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக பாகிஸ்தானுக்கு அளித்த உறுதியை இந்திய அரசு நிறைவேற்றவில்லை.
பொதுவாக, பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்வதே சரியானதாக இருக்கும். மும்பை தாக்குதல் சம்பவத்திலும் அத்தகைய நிலைப்பாடே எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் அது இரு நாட்டு அமைதிக்கும் பாதகமாக அமைந்துவிட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. ஆனால், அது ஒருபோதும் நிறைவேறாது.
காஷ்மீர் பிரச்னையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும். முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நிலவும் பிரச்னைகளுக்கும், முஸ்லிம் அல்லாதோருக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com