சிரியா விவகாரத்தில் இணைந்து செயல்பட அமெரிக்கா, துருக்கி ஒப்புதல்

சிரியா விவகாரத்தில் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அந்த விவகாரத்தில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன.

சிரியா விவகாரத்தில் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அந்த விவகாரத்தில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன.
இதுகுறித்து, துருக்கியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன், அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லுவுடன் தலைநகர் அங்காராவில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
சிரியா விவகாரத்தில் நாங்கள் இருவரும் இனியும் தனித் தனியாகச் செயல்படப் போவதில்லை. அந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்னை தொடர்பாக அமெரிக்கா ஒருவித நடவடிக்கையும், துருக்கி மற்றொரு வித நடவடிக்கையும் எடுக்கும் சூழல் இனி தொடராது.
அந்த விவகாரத்தில் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம். எனினும், அவ்வாறு செயல்படுவதற்கான செயல்திட்ட அமைப்பை உருவாக்க, மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
சிரியாவில் குர்து படையினர் வசமிருக்கும் மன்பிஜ் நகரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் அவர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில அமைந்துள்ள மன்பிஜ் நகரை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடமிருந்து குர்துப் படை கடந்த 2016-ஆம் ஆண்டு மீட்டது.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் குர்து வீரர்களுக்கு பயிற்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது.
இந்த நிலையில், தங்களது நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் குர்து அமைப்பினருக்கு, சிரியாவிலுள்ள ஒய்பிஜி குர்துப் படையினர் ஆதரவளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.
இதன் காரணமாக, மன்பிஜ் பகுதியிலுள்ள குர்துப் படையினர் மீது சிரியா கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் துருக்கி தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம், அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், அந்தப் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் ரெக்ஸ் டில்லர்சன் துருக்கி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com