பிரதமர் மோடி- டிரம்ப் இடையே உறுதியான நட்புறவு: அமெரிக்கா அரசு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே உறுதியான நட்புறவு நிலவுகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே உறுதியான நட்புறவு நிலவுகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் ஹிதர் நோவார்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்க அதிபருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் உறுதியான நட்புறவு நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா, ஹைதராபாதில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் செய்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
இரு தலைவர்களிடையேயான நட்பு, மிகவும் முக்கியமானதாகும். இது மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ஒரே குறிக்கோளுக்காக இணைவதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். இதற்கு முன்பு, பிற நாடுகள் விவகாரத்தில் உலக நாடுகள் ஒரே அணியில் வந்தது இல்லை. ஆனால் தற்போது அப்படி அல்ல. இராக்கில் நடைபெறும் பணிகளில் சவூதி அரேபியா உதவி செய்து வருகிறது என்றார் ஹிதர் நோவார்ட்.
வரி விதிப்பு விவகாரம்: இதனிடையே, ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும்போது இறக்குமதி அதிக அளவில் இருப்பதற்கு டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 
அதுகுறித்து ஹிதர் நோவார்டிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
வரி விகிதத்தை குறைக்கவும், வரிகள் அல்லாத முட்டுக்கட்டைகளை போக்கவும் இந்தியா கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இப்படி செய்வதால், இந்தியாவில் இருக்கும் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்க வழி ஏற்படும். அதேபோல், பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் இந்தியா சிறந்த போட்டியாளராக உருவெடுக்க வழிவகுக்கும்.
இந்தியா உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து வர்த்தக கூட்டாளிகள் நாடுகளும், நேர்மையான மற்றும் பரஸ்பர பயனளிக்கும் வகையில் வர்த்தகத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அமெரிக்க அதிபரின் விருப்பம் ஆகும். 
இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு முழு வளர்ச்சியை எட்டுவதற்கு தடையாக இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இரு நாடுகளும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கும் என்றார் ஹிதர் நோவார்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com