ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: பயிற்சி பெற்ற பள்ளியிலேயே தாக்குதல் நடத்திய கொலையாளி

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து 17 மாணவர்களை சுட்டுக் கொன்ற நபர் அதே பள்ளியில் துப்பாக்கி சுடும் குழுவில் பயிற்சி பெற்றவர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து 17 மாணவர்களை சுட்டுக் கொன்ற நபர் அதே பள்ளியில் துப்பாக்கி சுடும் குழுவில் பயிற்சி பெற்றவர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயிற்சி குழுவுக்கு, துப்பாக்கியை வைத்திருக்க வலியுறுத்தும் தேசிய அறக்கட்டளை நிதி உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
ஃபுளோரிடாவில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர் நிலைப் பள்ளியில் கடந்த புதன்கிழமை திடீரென புகுந்த நிகோலஸ் குரூஸ் என்ற 19 வயது இளைஞர் மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில், 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் , இந்தத் தாக்குதலில் 9-ஆம் வகுப்புப் படித்து வரும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர் உள்பட பலர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார், துப்பாக்கி சூடு நடத்திய நிக்கோலஸ் குரூûஸ அதிரடியாக கைது செய்தனர். அப்போது, அவர் அணிந்திருந்த அரக்கு நிறத்திலான சட்டையையும், மாணவர்களுக்கு துப்பாக்கி சுட பயிற்சி அளிக்கும் ராணுவ அதிகாரிக்கான லோகோவையும் மற்றும் ஏஆர்-15 ரக துப்பாக்கியையும் போலீஸார் கைப்பற்றினர். 
இந்த நிலையில், மாணவர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த அந்த நபர், அதே பள்ளியில் துப்பாக்கி சுட பயிற்சி அளிக்கும் குழுவின் முன்னாள் மாணவர் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த குழுவில் நிக்கோலஸ் துப்பாக்கி சுடுவதில் மிகவும் கைதேர்ந்த வல்லவராக விளங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 
இதுகுறித்து அவரது தோழர் ஆரோன் டெய்னர் கூறுகையில், 2016-ஆம் ஆண்டில் பள்ளியின் சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ளும் 4 பேர் அடங்கிய குழுவில் நிக்கோலஸூம் இடம்பெற்றிருந்தார். குறிதவறாமல் சுடுவதில் நிக்கோலஸ் வல்லவர். அவ்வப்போது, விலங்குகளை குறிவைத்து சுட்டு தனது திறமையை மேம்படுத்திக் கொண்டே இருப்பார்.
இருப்பினும், ஒழுங்கீனமாக செயல்பட்ட காரணத்தால் கடந்த 2016-இல் துப்பாக்கி சுடும் குழுவிலிருந்து நிக்கோலஸ் வெளியேற்றப்பட்டார் என்றார். 
1,700-க்கும் மேற்பட்ட உயர் நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சிகளை அளிப்பதற்காக தேசிய அளவில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்தப் பணிகளை கண்காணிப்பதற்காக, ராணுவம், கடற்படை, விமானப் படைப் பிரிவுகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இந்தக் குழுவுக்கு தேவையான துப்பாக்கி சுடும் பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். 
நிக்கோலஸ் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு தன்னிடம் உள்ள ஆயுதங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் நிக்கோலஸ் பதிவேற்றம் செய்திருந்தார். 
இதுகுறித்த தகவல் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-க்கு தெரிவிக்கப்பட்டும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அந்த குற்றச்சாட்டை எஃப்பிஐ தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. சரியான நேரத்தில் தகவல் கிடைத்தும் அதனை தொடர்ந்து கண்காணிக்க தவறியதால்தான் இவ்வளவு பெரிய சோக சம்பவம் நடைபெற்றதற்கு முக்கிய காரணம் என்பதை எஃப்பிஐ ஏற்றுக் கொண்டுள்ளது.
டிரம்ப் ஆறுதல்: துப்பாக்கிச் சூட்டில் 17 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், முன்கூட்டியே தகவல் கிடைத்தும் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளாததை எஃப்பிஐ ஒப்புக் கொண்டுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கபட்டு ஃபுளோரிடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினார். மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com