காஸாவில் மீண்டும் பதற்றம்: இஸ்ரேல் தாக்குதலில் 2 பாலஸ்தீனர்கள் பலி

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்திலிருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம்

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்திலிருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள் சனிக்கிழமை வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர். கடந்த 2014-ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே சண்டை நடைபெற்றதற்கு பிறகு நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இதற்கு பதிலடி தரும் விதத்தில் இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் போர் விமானங்களைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தாக்குதலில் ஈடுபட்டது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதாவது: காஸா எல்லைப் பகுதியிலிருந்து வெடிகுண்டுகள் வீசப்பட்டதற்கு பதிலடி தரும் விதமாகவே இந்த வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் 18 நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. குறிப்பாக, காஸாவில் டெய்ர் அல் பலாஹ் நகரில் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களை தயாரிக்கும் ஆலைகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் உள்ளிட்ட எட்டு நிலைகளை இலக்காகக் கொண்டு இந்த வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பயங்கரவாத கட்டமைப்புகளை வேரருக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
மேலும், காஸா எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் இந்த சம்பவங்கள் மிகவும் தீவிரமானவை. நிலைமையை உன்னிப்பாக கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதலில், தெற்கு காஸா பகுதியில் உள்ள ரஃபா நகரத்தை சேர்ந்த பாலஸ்தீனர்கள் இருவர் பலியானதாக கூறப்படுகிறது. 
இருப்பினும், இந்த தாக்குதலின்போது இரண்டு பாலஸ்தீனர்கள் காயம் மட்டுமே அடைந்ததாக அங்குள்ள மருத்துவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன பகுதியிலிருந்து ராக்கெட்டுகள் மூலம் இஸ்ரேல் எல்லைக்குள் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்மாதத்தின் முற்பகுதியில் ஹமாஸ் அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
6 பாலஸ்தீனர்கள் கைது: இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது.
இதனிடையே, பாதுகாப்புத் துறை அமைச்சர் அவிக்டோர் லிபர்மேன் மற்றும் இன்னும் பலரை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பாலஸ்தீனர்களை இஸ்ரேல் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு முகமை அதிகாரி ஷின் பெட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com