விழுந்து நொறுங்கிய ஈரான் விமானம் கண்டுபிடிப்பு

ஈரானில் 66 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை கண்டறிந்தனர்.
விழுந்து நொறுங்கிய ஈரான் விமானம் கண்டுபிடிப்பு

ஈரானில் 66 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை கண்டறிந்தனர்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஜாக்ரோஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஆசிமான் ஏர்லைன்ஸ் விமானத்தை ராணுவ ஹெலிகாப்டர் தேனா மலைப் பகுதியில் கண்டறிந்தது.
ராணுவத்தின் ஆளில்லா விமானங்கள் மூலம் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கக் கூடிய இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தோம்.
அந்த ஆய்வுகளின் அடிப்படையில், இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துப் பகுதிக்கு அனுப்பப்பட்டன என்றார் அவர்.
மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை இரவு முழுவதும் பனி மலையிலேயே தங்கியிருந்ததாகவும், உள்ளூர் மக்களின் உதவியுடன் அவர்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும் பேரிடர் மேலாண்மைப் பிரிவுத் தலைவர் மன்சூர் ஷிஷெஃபுரூஷ் தெரிவித்தார்.
ஆளில்லா விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட 500 படங்களின் உதவியுடன் விமானம் விழுந்து நொறுங்கிய இடம் கணிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்பஹான் மாகாணத்திலுள்ள யாசுஜ் நகரை நோக்கி ஆசிமான் ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. அப்போது, அதில் 60 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்தனர்.
யாசுஜ் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பனிமூட்டம் சூழ்ந்த ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள டேனா மலை மீது மோதி நொறுங்கி விழுந்தது. இந்த பயங்கர விபத்தில், விமானத்திலிருந்த ஒரு குழந்தை உள்ளிட்ட 66 பேரும் உயிரிழந்தனர்.
விழுந்து நொறுங்கிய விமானத்தைத் தேடும் பணிகள், கடுமையான பனிச் சூறாவளி காரணமாக ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, நிலைமை சற்று சீரானதைத் தொடர்ந்து, விமானத்தின் பாகங்களைத் தேடும் பணிகள் மீண்டும் செவ்வாய்க்கிழமை முடுக்கிவிடப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com