பாகிஸ்தானுக்கு ரூ.1,600 கோடி நிதியுதவி நிறுத்திவைப்பு

பாகிஸ்தானுக்கு அளிப்பதற்காக ஒதுக்கி வைத்திருந்த 255 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,617 கோடி) அந்நாட்டுக்கு இப்போதைக்கு வழங்காமல் நிறுத்தி வைப்பது என்று அமெரிக்கா
பாகிஸ்தானுக்கு ரூ.1,600 கோடி நிதியுதவி நிறுத்திவைப்பு

பாகிஸ்தானுக்கு அளிப்பதற்காக ஒதுக்கி வைத்திருந்த 255 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,617 கோடி) அந்நாட்டுக்கு இப்போதைக்கு வழங்காமல் நிறுத்தி வைப்பது என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
'அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளாக அளித்து வரும் நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளும் பாகிஸ்தான் அதற்குப் பதிலாக எதையும் செய்வதில்லை. பொய்களைக் கூறி ஏமாற்றி வருவதோடு பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை அளித்து வருகிறது' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோபத்துடன் கருத்து தெரிவித்தற்கு மறுநாள் இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
பாகிஸ்தானுக்காக அமெரிக்கா 2016-ஆம் நிதியாண்டில் ஒதுக்கிய 255 மில்லியன் டாலரை அந்நாட்டுக்கு இப்போதைக்கு வழங்குவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் எதிராக உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ப்பதை அதிபர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எங்களின் தெற்காசியக் கொள்கை ஆதரிக்கும் வகையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பது மட்டுமே அந்நாட்டுடனான நமது உறவுவையும் எதிர்கால நிதியுதவியையும் தீர்மானிக்கும். பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து பரிசீலிக்கும் என்றார் அவர்.
அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு: இதனிடையே, பாகிஸ்தான் விஷயத்தில் கடுமையான அணுகுமுறையை மேற்கொள்வது என்ற டிரம்ப் அரசின் முடிவை அந்நாட்டு எம்.பி.க்கள் பலரும் ஆதரித்துள்ளனர்.
இது தொடர்பாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கீழவை எம்.பி. மார்க்வேய்ன் மல்லின் கூறுகையில், 'பாகிஸ்தானுக்கு நிதியளிப்பதை நிறுத்துவது என்ற அதிபர் டிரம்ப்பின் முடிவை நான் ஆதரிக்கிறேன். நாங்கள் எப்போதுமே நண்பர்களுக்கு உதவுவோம். ஆனால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது என்ற எங்கள் இலக்கைப் பகிர்ந்து கொள்ளாதவர்களுக்கும் நீண்ட காலமாக ஆதரவு அளித்து வந்துள்ளோம். தற்போது, எங்கள் அதிபரின் துணிச்சலான நடவடிக்கையைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேலவை எம்.பி. ராண்ட் பால், சமந்தா வினோக்ராட் உள்ளிட்ட எம்.பி.க்களும் அமெரிக்க அரசின் முடிவை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, டிரம்ப் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட முதல் பதிவில் பாகிஸ்தான் தலைமையைக் கடுமையாகச் சாடி கருத்துகளைப் பதிவிட்டார். அதில், 'கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு இதுவரை ரூ.2.1 லட்சம் கோடிக்கு மேலான நிதியை அமெரிக்கா முட்டாள்தனமாக வழங்கியுள்ளது. அதற்கு பதிலாக அமெரிக்காவை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுவது, பொய்த் தகவல்களைக் கூறுவது போன்ற காரியங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வந்துள்ளது. அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் தேடி வந்த பல பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது. எனவே, இனி மேலும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எவ்வித நிதியுதவியும் வழங்காது' என்று தெரிவித்திருந்தார். 
டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் பதிலளிக்கையில் 'பயங்கரவாத எதிர்ப்பில் தோழமை நாடு என்ற முறையில் பாகிஸ்தான், நிலம் மற்றும் வான்வழி தகவல் தொடர்பு, ராணுவ தளங்கள், புலனாய்வு ஒத்துழைப்பு ஆகியவற்றை அமெரிக்காவுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இதுதான் கடந்த 16 ஆண்டுகளில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பைச் சீரழிக்க உதவியது. ஆனால் அவர்கள் (அமெரிக்கா) அவநம்பிக்கையை மட்டும் திருப்பித் தந்துள்ளனர் என்று தெரிவித்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com