‘பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான சம்பளம் கொடுத்தால் தண்டனை!’ பாலின சமநிலைக்கான ஓர் புதிய சட்டம்!!

சம வேலைக்குச் சம ஊதியம் ஏன் தரக்கூடாது? ஒரே வேலையை இருவரும் செய்தாலும் பாலின வேறுபாட்டின் அடிப்படையில் பெண்களுக்கு குறைவான சம்பளத்தை தருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஐஸ்லாந்தில் புது சட்டம் இயற்றம்.
‘பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான சம்பளம் கொடுத்தால் தண்டனை!’ பாலின சமநிலைக்கான ஓர் புதிய சட்டம்!!

சம வேலைக்குச் சம ஊதியம் ஏன் தரக்கூடாது? பல நிறுவனங்கள் ஒரே வேலையை இருவரும் செய்தாலும் பாலின வேறுபாட்டின் அடிப்படையில் பெண்களுக்கு குறைவான சம்பளத்தை தருவதை எதிர்த்து நாடு முழுவதிலும் எதிர்ப்புக் குரல் எழுந்தவாறே இருந்தன. இந்நிலையில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐஸ்லாந்தில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.

ஆண், பெண் பாலின சமநிலையை நிலை நாட்டுவதில் உலகிலேயே முன்னணியில் இருப்பது ஐரோப்பிய நாடுகள். நமது இந்தியாவில் கூட ஆண்கள் செய்யும் அதே வேலையைச் செய்யும் பெண்களுக்கு ஆண்களை விடவும் 30 முதல் 40 சதவீதம் குறைவான சம்பளமே வழங்கப் படுகிறது. மக்கள் தொகை அளவில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா, அதில் சரிபாதி பெண்கள். இருந்தும் வேலைக்கு ஏற்றக் கூலி பெறுவதில் பாலின பாகுபாட்டால் பெண்கள் சுரண்டப் படுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஆசிய நாடுகளின் அளவிற்கு அவை மோசமில்லை என்பதே பொருளாதார வல்லுநர்களின் கூற்று.

ஐஸ்லாந்து,

இதைப் போன்ற பாலின பாகுபாட்டை எதிர்த்து ஐஸ்லாந்தை சேர்ந்த வேலைக்குச் செல்லும் பெண்கள் பல முறைகளில் போராடினார்கள். 3,23,000 மக்கள் தொகையை கொண்ட இந்த நாடு அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவு நாடாகும். சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறைகளில் அதிகம் லாபம் காண்கிறது. உலக நாடுகளின் வரிசையில் பாலியல் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் முதல் இடத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிலைத்து இருக்கிறது ஐஸ்லாந்து. இந்தப் பட்டியலை வெளியிடுவது உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) ஆகும். ‘இந்த நாட்டின் பெண்களுக்கே இந்த நிலையா?’ என்கிற பல கேள்விகளை எழுப்பியவாறே பல கட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால் இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் அரசின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பப் புதுமையான ஒரு போராட்டத்தை இந்தப் பெண்கள் கையில் எடுத்தனர். 

பெண்களின் 2.22 மணி வேலை நேரம் புறக்கணிப்புப் போராட்டம்,

ஐஸ்லாந்தை பொருத்தவரை ஆண்களை விடப் பெண்களுக்கு 14 முதல் 18 சதவீதம் குறைவான சம்பளம் வழங்கப் பட்டது (இந்தியாவில் இருக்கும் 30 முதல் 40 சதவீத வித்தியாசத்துடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகம் தான்). அதன் அடிப்படையில் பார்த்தால் தினமும் பெண்கள் செய்யும் 8 மணி நேர வேலையில் 2.22 மணி நேரம் சம்பளமே இல்லாமல் இலவசமாக வேலை செய்வதற்கு சமம். அதனால் 2016-ம் ஆண்டு நாடு முழுவதிலும் உள்ள வேலை செய்யும் பெண்கள் தங்களது பணி முடிவதற்கு 2 மணி 22 நிமிடங்கள் இருக்கும் நிலையில் வேலையை விட்டு வெளியேறி ஒரு இடத்தில் திரண்டு போராடினர். ஒரே நேரத்தில் 30 சதவீத பெண்கள் திரண்ட நிலையில் மற்றவர்கள் அலுவலகத்தில் பணிகளை பார்த்துக் கொண்டனர். இப்படியே தொடர்ச்சியாக பல நாட்களுக்குத் தினமும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டது அரசின் கவனத்தை ஈர்த்தது.

இந்தப் போராட்டத்திற்கு முடிவு கட்டும் விதமாகக் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு சட்டத்தை ஐஸ்லாந்து இயற்றியது. சம வேலையைச் செய்யும் பெண்களுக்கு ஆண்களை விடக் குறைவான சம்பளம் தருவது தண்டனைக்குரிய  குற்றம் என அறிவித்தது. 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் எனக் கூறி அந்த நாட்டு உழைக்கும் பெண்களுக்கான புத்தாண்டு பரிசாக இதை வழங்கியுள்ளது.

சட்டமாக்கிய முதல் நாடு, 

உலகிலேயே ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம் வழங்குவதைச் சட்டமாக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் ஐஸ்லாந்து பெற்றுள்ளது. மேலும் இப்படி ஒரு சட்டத்தை இயற்றி பாலின சமத்துவத்திற்கு புதிய அங்கீகாரத்தையே ஐஸ்லாந்து கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

இந்த புதிய சட்டத்தின்படி குறைந்தது 25 நபர்களை வேலைக்கு எடுக்கும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சம ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் சான்றிதழைப் பெற வேண்டும். அப்படி இந்தச் சான்றிதழை பெறவில்லை என்றால் அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். 

ஐஸ்லாந்தின் ஆளும் அரசான வலதுசாரியும், எதிர்க்கட்சிகளும் ஒரு மனதாக இந்தச் சம ஊதிய சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஐஸ்லாந்து பாராளுமன்றத்தில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களே. 2020-ம் ஆண்டிற்குள் பாலியல் வேறுபாடுகளால் உள்ள ஊதிய ஏற்றத் தாழ்வுகள் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் அந்த அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

வேலை வாய்ப்பு, அரசியல் பங்கு, பொருளாதார நிலை போன்றவற்றின் அடிப்படையில் உலகளாவிய பாலின இடைவேளை கணக்கிடப்படுகிறது. மொத்தம் 144 நாடுகளில் இருந்து தகவல்கள் சேகரிக்கப் பட்டு இந்தப் பட்டியலை உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிடுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாகவும் இந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பது ஐஸ்லாந்து தான். 

இந்தியாவின் நிலை,

இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு எந்த இடம் என்றுதானே யோசிக்கிறீர்கள்! 2016-ம் ஆண்டிற்கான பட்டியலில் பாலின சமத்துவத்தில் இந்தியா 87-வது இடத்தில் இருக்கிறது. 2015-ம் ஆண்டில் இருந்த 108-வது இடத்தில் இருந்து பல படிகள் முன்னேறி 2016-ம் ஆண்டு 87-வது இடத்தை இந்தியா எட்டியுள்ளது பாராட்டுதலுக்கு உறிய ஒன்றுதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com