ஆப்பிரிக்க நாடுகள் குறித்த டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை

ஆப்பிரிக்க நாடுகள் குறித்து தகாத வார்த்தையைப் பயன்படுத்தி டிரம்ப் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகள் குறித்த டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை

ஆப்பிரிக்க நாடுகள் குறித்து தகாத வார்த்தையைப் பயன்படுத்தி டிரம்ப் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்ததாவது:
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறி வசிக்க வகை செய்யும் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளை நீக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், குடியேற்றவாசிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்த விவகாரம் குறித்து டொனால்ட் டிரம்ப்பை அதிபர் மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசியது.
அப்போது, சில ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஹைட்டி நாட்டவர்களுக்கு குடியேற்ற உரிமை வழங்க வேண்டும் என்று எம்.பி.க்கள் டொனால்ட் டிரம்ப்பிடம் வலியுறுத்தினர்.
அதற்கு டொனால்ட் டிரம்ப், 'அருவருப்பை ஏற்படுத்தும்' என்னும் பொருள் படும் தகாத வார்த்தையைப் பயன்படுத்தி, அத்தகைய நாடுகளைச் சேர்ந்தவர்களை ஏன் அமெரிக்காவில் குடியேற்ற வேண்டும்? என்று கேள்வியெழுப்பியதாக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பதிலாக நார்வே நாட்டவர்களை ஏன் அதிக அளவில் அனுமதிக்கக் கூடாது எனவும் டிரம்ப் கேட்டதாக அவர்கள் கூறினர்.
கண்டனம்: டிரம்ப்பின் இந்தக் கருத்து, அமெரிக்காவிலும், ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளிலும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
குறிப்பாக, அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆப்பிரிக்க நாடுகள் குறித்து டிரம்ப் கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. விப் ஸ்டெனி ஹெச். ஹோயர் கூறியதாவது:
ஆப்பிரிக்க நாடுகள் குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகள் இனவெறியை வெளிப்படுத்துகின்றன. மேலும், அவரது வார்த்தைகள் அமெரிக்காவின் உண்மையான பண்பை வெளிப்படுத்துவதாக இல்லை.
குடியேற்றவாசிகள் குறித்து அதிபரின் கண்ணோட்டம் என்ன என்பதை அவரது வார்த்தைகள் தெளிவாக விளங்க வைக்கின்றன. இனியும் அவர் அமெரிக்க மாண்புக்கு ஏற்ற அதிபராகச் செயல்படுவாரா என்பது சந்தேகமே என்றார் அவர்.
மற்றொரு எம்.பி.யான ராஸ்-லெஹ்டினென் கூறுகையில், ''டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய தகாக வார்த்தைகள் மாண்பு மிக்க வெள்ளை மாளிகையில் ஒலிக்கக் கூடாதவை ஆகும்'' என்று கூறினார்.
வெள்ளை மாளிகை விளக்கம்
அமெரிக்க மக்களின் நலனுக்கே அதிபர் டொனல்ட் டிரம்ப் முக்கியத்துவம் அளிப்பதாக அதிபர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை முதன்மை இணைச் செய்தியாளர் ராஜ் ஷா கூறியதாவது:
வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வதிகள், வெளிநாட்டினரின் நலன்களுக்காகப் போராடி வருகின்றனர். 
ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்றார் அவர். 
எனினும், ஆப்பிரிக்க நாடுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் கூறியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஐ.நா. கண்டனம்
ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஹைட்டி குறித்து டிரம்ப் கூறியுள்ள கருத்து அவமானத்துக்குரியது என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மனித உரிமைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில்லி கூறியதாவது:
ஒரு நாட்டையோ, ஒட்டுமொத்த கண்டத்தையோ 'அருவருக்கத்தக்கப் பகுதி' என்று கூறி ஒதுக்கிவிட முடியாது. 
அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த வார்த்தையைக் கூறியிருந்தால் அது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தக்கூடிய வார்த்தையாகும்.
டிரம்ப்பின் இந்த வார்த்தைகளால் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com