வட கொரிய அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கப் பணிகள் தீவிரம்: மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த ஆயத்தம்?

வட கொரியாவில் அணுகுண்டு சோதனை மேற்கொள்ளப்படும் பகுதியில் அண்மைக் காலமாக சுரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட கொரிய அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கப் பணிகள் தீவிரம்: மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த ஆயத்தம்?

வட கொரியாவில் அணுகுண்டு சோதனை மேற்கொள்ளப்படும் பகுதியில் அண்மைக் காலமாக சுரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து 38நார்த் என்ற அதன் இணையதளம் கூறியதாவது:
வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளும் புன்கீ-ரீ மலைப்பகுதியில், அண்மைக் காலமாக வாகனங்கள் மற்றும் ஆள்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது செயற்கைக் கோள் படங்களில் தெரிய வந்துள்ளது.
சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும், அவ்வாறு சுரங்கம் தோண்டும்போது வெளிவரும் மணலை அப்புறப்படுத்துவதற்கான லாரிகளும் அந்தப் பகுதிக்கு வருவது அதிகரித்து வருகிறது.
இந்தக் காட்சிகள், மேலும் ஒரு அணு ஆயுத சோதனையை நடத்த புன்கீ-ரீ பகுதியை வட கொரியா ஆயத்தமாக்கி வருவதைக் காட்டுகிறது.
புன்கீ-ரீ பகுதில் அடுத்தடுத்து அணுகுண்டுப் சோதனை நடத்தப்பட்டதால் அந்தப் பகுதியின் நிலத்தடி பாறைகள் நொறுங்கிய நிலையில் காணப்படுகின்றன.
அதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இந்தப் பகுதியில் சிறு நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தப் பகுதியில்தான் வட கொரியாவின் 6 அணுகுண்டு சோதனைகளில் கடைசி 5 சோதனைகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆற்றிய புத்தாண்டு உரையில், தென் கொரியாவில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பான்முன்ஜோம் எல்லை கிராமத்தில், கடந்த டிசம்பர் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா முன்வந்தது.
இதற்கிடையே, வட கொரியாவின் எதிர்ப்பையும் மீறி ஆண்டு தோறும் நடைபெறும் அமெரிக்க-தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி இந்த முறை தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வட கொரியா சம்மதம் தெரிவித்ததைது.
அதனைத் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.
இந்த இணக்கமான சூழ்நிலையில், வட கொரியா மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனை நடத்தினால், அது கொரிய தீபகற்பத்தில் தணித்துள்ள பதற்றத்தை மீண்டும் அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com