தேர்தல் தலையீடு விவகாரத்தில் புதினுடன் இணக்கம்: அமெரிக்காவில் டிரம்ப்புக்கு கடும் எதிர்ப்பு

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அந்த நாட்டுக்கு ஆதரவாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி வருவது அமெரிக்காவில் கடும்
ஹெல்சிங்கி பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது...
ஹெல்சிங்கி பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது...

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அந்த நாட்டுக்கு ஆதரவாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி வருவது அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு அலையை எழுப்பியுள்ளது.

டிரம்ப்பின் வழக்கமான விமர்சகர்கள் மட்டுமின்றி, அவரது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும், முக்கிய ஊடகங்களுமே இந்த விவகாரத்தில் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அப்போதைய குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்புக்கு ஆதரவாக வாக்களார்களின் மனநிலையை மாற்றும் வகையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின் அஞ்சல் மற்றும் அலுலக ஆவணங்களை இணையதளம் மூலம் ஊடுருவி வெளியிட்டதாக 12 ரஷிய உளவுத் துறை அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்தது.
அதையடுத்து, அதற்கு முன்னரே திட்டமிட்டிருந்தபடி ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்துப் பேசக் கூடாது என்று பலரும் வலியுறுத்தினர்.

எனினும், ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் டிரம்ப் - புதின் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இரு நாட்டு நல்லுறவை பலப்படுத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

அப்போது பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு கூறியுள்ளதை மறுக்கும் வகையில் பேசினார்.

அதிபர் தேர்தலில் தலையிடவில்லை என்று ரஷியா கூறுகிறது. அதுவும் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே உள்ளது' என்று அவர் கூறியது, அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதன் மூலம் ஜனநாயகத்தின் மாண்பைக் குலைத்த ரஷியாவிடம் அதிபர் டிரம்ப் பணிந்து போய்விட்டதாக பலரும் குற்றம் சாட்டினர்.

தேர்தல் தலையீடு விவகாரத்தில் ரஷியாவுக்கு ஆதரவான கருத்துகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வரும் நிலையிலும், அமெரிக்க ஜனநாயக நடைமுறையை சீர்குலைக்கும் வகையில் இணையதளம் மூலம் ரஷியா ஊடுருவியது உண்மைதான் என்று தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநரர் டான் கோட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஹெல்சிங்கி பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிரம்ப் பேசியது குறித்து ஆளுங்கட்சியான ஜனநாயகக் கட்சியின் மூத்த எம்.பி.யும், சக்தி வாய்ந்த ஆயுதப் படைகளுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவருமான ஜான் மெக்கெய்ன், நாடாளுமன்ற கீழவைத் தலைவர் பால் ரியான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்கள் சாடல்
ஹெல்சிங்கி பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்காவின் முன்னணி ஊடங்களும் டிரம்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளன.
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், ஹெல்சிங்கியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்காக பேசுவதற்கு பதில், அதிபர் புதினிடம் சரணாகதி அடைந்துவிட்டார்' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழின் ஆசிரியர் குழு எழுதியுள்ள கட்டுரையில், ரஷியாவுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகவே இணைந்துவிட்டார்' என்று குற்றம் சாட்டியுள்ளது.
நவீன வரலாற்றில் டிரம்ப்பைப் போல் ஓர் அமெரிக்க அதிபரை பார்த்திருக்க முடியாது' என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் ஆதாயத்தை விட அமைதியே முக்கியம்'


உலகின் சக்தி வாய்ந்த இரு நாடுகளிடையேயான மோதல்களைத் தவிர்த்து, அமைதியை ஏற்படுத்துவதற்காகவே, அரசியல்ரீதியான எதிர்ப்புகளையும் மீறி ரஷியாவுக்கு ஆதரவு அளிப்பதாக டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து ஃபின்லாந்திலிருந்து அமெரிக்கா திரும்பும் வழியில், அதிபர் டிரம்ப் வெளியிட்ட சுட்டுரைப் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:

நான் ஏற்கெனவே பல முறை சொன்னது போல, அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இருந்தாலும், நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக பழைய விஷயங்களை புறக்கணிப்பதில் தவறில்லை.
உலகின் மிகப் பெரிய இரண்டு அணு ஆயுத நாடுகளான அமெரிக்காவும், ரஷியாவும் இனியும் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் தேவையில்லை. நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவதே அமைதிக்கு வழிவகுக்கும்.
அரசியல் ஆதாயத்துக்காக அமைதியை குலைப்பதைவிட, அமைதியை ஏற்படுத்துவதற்காக அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன் என்று டிரம்ப் தனது பதிவுகளில் தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் தலையீடு 2016-ஆம் ஆண்டு தேர்தலோடு முடிந்துவிடவில்லை. அமெரிக்க ஜனநாயகத்தின் மாண்பைக் குலைக்க அந்த நாடு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவது, எங்களது புலனாய்வில் தெளிவாகத் தெரியவந்துள்ளது.
- டான் கோட்ஸ், 
தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர்

என் நினைவுக்கு எட்டியவரை இப்படி ஒரு அவமானகரமான செயல்பாட்டில் எந்த அமெரிக்க அதிபரும் ஈடுபட்டதில்லை. ஹெல்சிங்கி மாநாடு மிகவும் தவறாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் புதினுக்கு எதிராக தலைநிமிர்ந்து நிற்க டிரம்ப்பால் முடியவில்லை என்பது மட்டுமல்ல, அவர் அதற்கு முற்படவும் இல்லை.
- ஜான் மெக்கெய்ன், 
ஆயுதப் படைகளுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர், குடியரசுக் கட்சி

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராகவும், மற்றொரு நாட்டின் சர்வாதிகாரத் தலைவருக்கு ஆதரவாகவும் அதிபர் டிரம்ப் எடுத்துள்ள நிலைப்பாடு, அருவருக்கத்தக்கதாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது.
- பிரமீளா ஜெயபால், 
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி., ஜனநாயகக் கட்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com