தேர்தல் தலையீடு விவகாரத்தில் புதினுக்கு நேரடிப் பொறுப்பு': நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றினார் டிரம்ப்

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்த விவகாரத்தில், அந்த நாட்டின் அதிபர் விளாதிமீர் புதினுக்கு நேரடி பொறுப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்
சிபிஎஸ் நியூஸ்' தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் டிரம்ப்.
சிபிஎஸ் நியூஸ்' தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் டிரம்ப்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்த விவகாரத்தில், அந்த நாட்டின் அதிபர் விளாதிமீர் புதினுக்கு நேரடி பொறுப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் புதினுக்கு ஆதரவாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் அமெரிக்காவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தற்போது தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிபிஎஸ் நியூஸ்' தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
2016-ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில், இணையதளம் மூலம் ஊடுருவி ரஷியா தலையீடு செய்ததற்கு அந்த நாட்டு அதிபர் விளாதிமீர் புதினே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
புதின்தான் ரஷியாவின் தலைமைப் பதவியில் இருப்பவர் என்பதால் அந்த நாட்டின் நடவடிக்கைகளுக்கு அவர்தான் பொறுப்பு ஆவார். தற்போது அமெரிக்க நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு என்பதைப் போல, ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு புதின்தான் பொறுப்பு என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. 
அமெரிக்கத் தேர்தலில்களில் ரஷியா தலையிடும் அபாயம் தொடர்ந்து இருக்கிறது' என்று தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் டான் கோட்ஸ் கூறுவதை ஏற்கிறேன் என்றார் அவர்.
அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, அப்போதைய குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்புக்கு ஆதரவாக வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் வகையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின் அஞ்சல் மற்றும் அலுவலக ஆவணங்களை இணையதளம் மூலம் ஊடுருவி வெளியிட்டதாக 12 ரஷிய உளவுத் துறை அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை அமைச்சகம் கடந்த வாரம் குற்றச்சாட்டு பதிவு செய்தது.
அதையடுத்து, அதற்கு முன்னரே திட்டமிட்டிருந்தபடி ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்துப் பேசக் கூடாது என்று பலரும் வலியுறுத்தினர்.
எனினும், ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் டிரம்ப் - புதின் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இரு நாட்டு நல்லுறவை பலப்படுத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
அப்போது பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு கூறியுள்ளதை மறுக்கும் வகையில் பேசினார்.
அதிபர் தேர்தலில் தலையிட்டது என நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை' என்று அப்போது அவர் கூறியது, அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டது மூலம் ஜனநாயகத்தின் மாண்பைக் குலைத்த ரஷியாவிடம் அதிபர் டிரம்ப் பணிந்து போய்விட்டதாக பலரும் குற்றம் சாட்டினர்.
ஹெல்சிங்கி பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிரம்ப் பேசியது குறித்து ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியின் மூத்த எம்.பி.யும், சக்தி வாய்ந்த ஆயுதப் படைகளுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவருமான ஜான் மெக்கெய்ன், நாடாளுமன்ற கீழவைத் தலைவர் பால் ரியான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எனினும், அரசியல் ஆதாயத்தைவிட அமைதியே முக்கியம் என்று கருதி, அத்தகைய கருத்துகளை வெளியிட்டு வருவதாக இரண்டு நாள்களாக தன்னிலை விளக்கமளித்து வந்த டொனால்ட் டிரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வார்த்தைப் பிழை!
ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில், அதிபர் புதினுடனான திங்கள்கிழமை சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, வார்த்தைகளைப் பிழையாகப் பயன்படுத்தியதால் தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டுவிட்டதாக சிபிஎஸ் நியூஸ்' பேட்டியின்போது டிரம்ப் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிடவில்லை என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை' என்றுதான் சொல்ல வந்தேன். ஆனால், அதற்குப் பதிலாக ரஷியா தலையிட்டது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை' என்று தவறாக சொல்லிவிட்டேன் என்றார் அவர்.
நோ!': வெள்ளை மாளிகை விளக்கம்
ஹெல்சிங்கி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமெரிக்காவை ரஷியா தொடர்ந்து குறிவைக்கிறதா?' என்ற செய்தியாளரின் கேள்விக்கு டிரம்ப் நோ' (இல்லை) என்று பதிலளித்தார்.
இதற்கு அமெரிக்காவில் மிகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியதாவது:
அமெரிக்காவை ரஷியா குறிவைப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது' என்பதற்காகத்தான் அதிபர் டிரம்ப் நோ' என்று கூறினார். அமெரிக்காவை ரஷியா குறிவைக்கவில்லை என்ற அர்த்தத்தில் அவர் அவ்வாறு கூறவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com