இணையதளம் மூலம் ஊடுருவல்: சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 15 லட்சம் பேரது தகவல்கள் திருட்டு

சிங்கப்பூரின் மிகப் பெரிய மருத்துவக் கூட்டமைப்பினுடைய தகவல் களஞ்சியத்துக்குள் இணையதளம் மூலம் ஊடுருவி, அந்த நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் உள்ளிட்ட 15 லட்சம் பேரது
மருத்துவ தகவல் திருட்டு குறித்து சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை விளக்கமளிக்கும் இணையதள பாதுகாப்பு அமைப்பின் தலைவர் டேவிட் கோ, தகவல் தொடர்புத் துறை அமைச்சகச் செயலர் கேப்ரியல் லிம்
மருத்துவ தகவல் திருட்டு குறித்து சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை விளக்கமளிக்கும் இணையதள பாதுகாப்பு அமைப்பின் தலைவர் டேவிட் கோ, தகவல் தொடர்புத் துறை அமைச்சகச் செயலர் கேப்ரியல் லிம்

சிங்கப்பூரின் மிகப் பெரிய மருத்துவக் கூட்டமைப்பினுடைய தகவல் களஞ்சியத்துக்குள் இணையதளம் மூலம் ஊடுருவி, அந்த நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் உள்ளிட்ட 15 லட்சம் பேரது மருத்துவக் குறிப்புகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்ஹெல்த்' என்ற அந்த அமைப்பில் நிகழ்த்தப்பட்ட இந்த ஊடுருவல், சிங்கப்பூர் வரலாற்றிலேயே மிக மோசமான இணையதள தகவல் திருட்டு என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகமும், தகவல் தொடர்பு அமைச்சகமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சிங்கப்பூர் பொது மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, செங்காங் மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டமைப்பான சிங்ஹெல்த்', சிங்கப்பூரின் மிகப் பெரிய மருத்துவ அமைப்பாகும்.
இந்த அமைப்பின் தகவல் களஞ்சியத்துக்குள் அண்மையில் இணையதளம் மூலம் ஊடுருவிய மர்ம நபர்கள், சுமார் 15 லட்சம் பேர் தொடர்பான மருத்துவக் குறிப்புகளைத் திருடியுள்ளனர். அந்த 15 லட்சம் பேரில், பிரதமர் லீ சியென் லூங்கும் ஒருவர் ஆவார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி முதல், இந்த மாதம் 4-ஆம் தேதி வரை அவ்வப்போது மருத்துவமனையில் தங்கியிருந்த அந்த 15 லட்சம் பேரின் மருத்துவ ஆய்வு விவரங்கள், உடல்நலம் குறித்த தகவல்கள், மருத்துவரின் குறிப்புகள் ஆகியவை களவாடப்பட்டுள்ளன. எனினும், அத்தகைய தகவல் களஞ்சியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எந்தத் தகவலையும், ஊடுருவல்காரர்கள் திருத்தவோ, அழிக்கவோ இல்லை.
பிரதமர் லீ சியென் லூங் தொடர்பான மருத்துவ விவரங்களை மட்டும் மர்ம நபர்கள் மீண்டும் மீண்டும் ஊடுருவி சேகரித்துள்ளனர்.
நோயாளிகளின் பெயர்கள், அவர்களது தேசிய பதிவு அடையாள எண், முகவரி, பாலினம், இனம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் களவாடப்பட்டுள்ளன.
இந்த மாதம் 4-ஆம் தேதிக்குப் பிறகு தகவல் திருட்டு நிறுத்தப்பட்டது. எனினும், இதுகுறித்து போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்று அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com